நாளை மகா தீபம்: 2,668 அடி மலை உச்சியில் ஜோதிப் பிழம்பாய் அருள்பாலிக்க இருக்கும் அண்ணாமலையார்!

Nov 23, 2026 - 18:00
0
நாளை மகா தீபம்: 2,668 அடி மலை உச்சியில் ஜோதிப் பிழம்பாய் அருள்பாலிக்க இருக்கும் அண்ணாமலையார்!

பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான `மகா தீபம்’ நாளை மாலை ஏற்றப்படுகிறது. இதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி எதிரே `ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்’ என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் `பரணி தீபம்’ ஏற்றப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. தொடர்ந்து 11 நாள்களுக்குப் பிரகாசிக்கவிருக்கும் இந்த மகா தீபத்திற்காகத் தயார் செய்யப்பட்ட 5.5 அடி உயரமும், 310 கிலோ எடையும் கொண்ட பஞ்சலோக கொப்பரைக்கு இன்று அதிகாலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், 40 பேர் கொண்ட குழுவினர் அந்தக் கொப்பரையை மலை உச்சிக்குத் தூக்கிச் சென்றனர். தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்யும், 1,200 மீட்டர் துணியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மகா தீபம்

இந்த மகா தீப தரிசனத்திற்காக 40 லட்சம் முதல் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது. இதனால், நகரைச் சுற்றிலும் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், கடந்த 2024-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் உயிர்சேதத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டும் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தீப மலையில், சட்டவிரோதமாக ஏறுபவர்களைத் தடுக்க வனத்துறையினர் 28 இடங்களில் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ``தடை உத்தரவை மீறி மலை ஏற முயன்றால் தமிழ்நாடு வனச்சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என மாவட்ட நிர்வாகம் கறார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User