TNPL 2026: திண்டுக்கல்லை சாய்த்த கோவை; சேப்பாக்கை வீழ்த்திய திருச்சி - சூடுபிடிக்கும் பிளே ஆப் ரேஸ்!

Aug 22, 2026 - 11:30
0
TNPL 2026: திண்டுக்கல்லை சாய்த்த கோவை; சேப்பாக்கை வீழ்த்திய திருச்சி - சூடுபிடிக்கும் பிளே ஆப் ரேஸ்!

TNPL 2026 தொடரின் 25-வது மற்றும் 26-வது லீக் போட்டிகள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸும் பலபரீட்சை நடத்தின.

VIDA கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ்

25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த VIDA கோவை கிங்ஸ் 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

கோவை அணியின் பேட்டிங்கில் சுரேஷ் லோகேஷ்வர் 31 ரன்களும், பாலசுப்பிரமணியம் சச்சின் 30 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாருக்கான் 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் இடம்பெற்றன.

மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் திண்டுக்கல் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைத் துரத்திய திண்டுக்கல் அணி 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் கோவை கிங்ஸ் 85 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.

கோவை தரப்பில் ஜாதவேத் சுப்பிரமணியன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசினார்.இந்தப் போட்டியில் 18 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

திருச்சி கிராண்ட் சோழாஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

26-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. திருச்சி அணியின் பேட்டிங்கில் ஷ்யாம் சுந்தர் 52 ரன்களும், சஞ்சய் யாதவ் 54 ரன்களும் எடுத்து முக்கிய பங்களிப்பை வழங்கினர். இதன் மூலம் திருச்சி அணி 191 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது.

191 ரன்கள் இலக்கைத் துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கே. ஆஷிக் 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசி போராடினார். ஆனால் திருச்சி பந்துவீச்சாளர்கள் இறுதிவரை கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதால், சேப்பாக் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 177/6 எடுத்து,14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸிடம் தோல்வியடைந்தது. திருச்சி தரப்பில் கே. ஈஸ்வரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 54 ரன்கள் விளாசி திருச்சியின் ஸ்கோரை உயர்த்திய சஞ்சய் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றிகளின் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி, பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அதேபோல், திண்டுக்கல்லை வீழ்த்திய VIDA கோவை கிங்ஸ் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறி, பிளே ஆப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User