திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!

Aug 31, 2026 - 08:31
0
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்: கல்வியில் மேன்மை அருளும் தலம்!

நெடுங்குணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது யோகராமர் தலம்தான். அதே ஊரில் பழைமையான ஒரு சிவாலயமும் உண்டு. சுகபிரம்ம ரிஷி வழிபட்ட இந்தச் சிவாலயத்தின் சிறப்புகள் ஏராளம். வாருங்கள் அத்தலம் குறித்து அறிந்துகொள்வோம்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம். ஊரின் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில்.

சுகபிரம்மர் வழிபட்ட சிறப்போடு பிணிகள் தீர்க்கும் அபூர்வ பாதாள லிங்கமும் அஷ்ட லிங்கங்களும் அருளும் தலமாகவும் இந்தச் சிவாலயம் திகழ்கிறது.

நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் கோயில் பாதாளலிங்கம்
நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் கோயில் பாதாளலிங்கம்

வியாசரின் மைந்தர் சுகபிரம்மர். யாத்திரையாகப் பல தலங்களைத் தரிசித்தவர், தென்னகம் வந்தார். நெடுங்குணம் பகுதியை அடைந்தவர், இங்குள்ள மலையை ஈசனின் வடிவாகக் கண்டார். அவர் மேனி சிலிர்க்க இங்கேயே அமைந்து தவம் செய்வது என்று தீர்மானித்தார்.

மலையின் உச்சியில், சிவனாரை எண்ணித் தவத்தில் மூழ்கினார். முன்னதாக அந்த இடத்தைச் சுத்தம் செய்யவும், சிவ பூஜை அபிஷேகத்துக்காகவும் தண்ணீர் தேவையாக இருந்தது. மலை முழுவதும் சுற்றி வந்தும்கூட தண்ணீர் கிடைக்கவே இல்லை.

சுகபிரம்மர் ஈசனை வேண்டினார். சிவம் மனம் கனிந்தது. அங்கே தரையிலிருந்து தண்ணீர் மெள்ள ஊற்றெடுத்தது. அந்த நீரை எடுத்து, கண்களில் ஒற்றிக்கொண்டார்; தலையில் தெளித்துக் கொண்டார்; கொஞ்சம் அள்ளியெடுத்துப் பருகினார். சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, அதனை அபிஷேகித்து வழிபட்டார். அதன்பிறகு, அவரின் தவம் தொடர்ந்தது. அவரின் தவத்தின் பலனாக, தம்பதி சமேத ராகக் காட்சி தந்தார் சிவபெருமான்.

அவரைப் பலவாறு வணங்கித் தொழுதார் சுகபிரம்மர். அதன்பின் முனிவர்கள் பலரும் இத்தலம் வந்து தவம் செய்யத் தொடங்கினர். சோழர்கள் காலத்தில் ஒரு மன்னன் இத்தலம் வந்து மலையின் சிறப்பை உணர்ந்து அதை வணங்கி முனிவர்களைத் தரிசிக்கும் ஆசையில் மலையின் உச்சிக்குச் சென்றான்.

அங்கே முனிவர்கள் பலர் தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான்; அவர்களை வணங்கினான். இந்த மலையின் மாண்பு குறித்தும், சுகபிரம்மருக்கு ஈசன் காட்சி தந்தது குறித்தும் முனிவர்கள் மன்னனுக்கு விவரித்தனர். அத்துடன் சுனைநீரின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

சுகபிரம்ம மகரிஷி
சுகபிரம்ம மகரிஷி

இதில் சிலிர்த்த சோழ மன்னன், மலைடி வாரத்தில் கோயில் எழுப்பினால், ஊர்மக்கள் வணங்கி வழிபட வசதியாக இருக்கும் என எண்ணம் கொண்டான். அவனது அந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றது. சிவாலயத்தில் அற்புதமாக எழுந்தருளினார் தீர்க்காஜலேஸ்வரர்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபாலாம்பிகை.

இந்த ஆலயம் கிழக்குப் பார்த்து அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தக்கிணறு வற்றுவதே இல்லை என்கிறார்கள். அதிலிருந்து தீர்த்தம் எடுத்து, தினந்தோறும் ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகிக்கப்படுகிறது.

இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்கமூர்த்தத்தை வில்வம் சார்த்தி வழிபட்டால், தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதிகம். இந்தக் கோயிலில் ஸ்ரீசுப்ரமணியரின் விக்கிரகத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

அபூர்வ கோலத்தில் அருளும் ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் இவரை வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து தீபமேற்றி இவரை வணங்கி வழிபட்டால், தோஷங்கள் விலகும்; கல்வி- கேள்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை!

கோயிலில், சுகபிரம்ம முனிவருக்கும் சந்நிதி உள்ளது. வியாழக்கிழமை அன்று ஸ்ரீசுக பிரம்மரையும் ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால், ஞானம் கிடைக்கும். அம்பாள் ஸ்ரீபாலாம்பிகை, கருணையே உருவானவள். இந்த தேவிக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக வளர்வர் என்பது நம்பிக்கை.

நெடுங்குணம் ஸ்ரீதீர்க்காஜலேஸ்வரர் கோயில்

பங்குனித் திருவிழா இங்கே விசேஷமாக நடைபெறுகிறது. ஆடி மாதத்திலும் தெப்பம், திருக்கல்யாணம் என வைபவங்கள், களைகட்டுகின்றன. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். சிவதரிசனம் உங்கள் மனதை நிறைக்கும். வாழ்க்கை சிறக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User