திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

May 28, 2026 - 12:01
0
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல நூற்றாண்டுகள் பழமையான தங்கம், வைரம் மற்றும் இதர ஆபரணங்களும் இதனுடன் சேர்ந்து திருடப்பட்டுள்ளதாக உளவுத்துறை டி.ஜி.பி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பல கோடி ரூபாய் மதிப்புடையவை ஆகும்.

ஆறு மாதங்களுக்கு முன்பு டி.ஜி.பி சமர்ப்பித்த விசாரணை அறிக்கை நேற்றுதான் வெளியானது. ​சபரிமலை தங்கத் திருட்டை மிஞ்சும் வகையில் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலில் கொள்ளை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கேரள மாநில டி.ஜி.பி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வநாத் சின்ஹாவிடம் சமர்ப்பித்த அறிக்கையில்தான் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளைபோனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபத்மநாபருக்கு சார்த்தப்படும் 'வைரநாமம்' ஆறு மாதங்களுக்கு முன்பு பாலிஷ் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக ஆவணங்களில் உள்ளது.

பத்மநாப ஸ்வாமி

​ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் மூல விக்ரகத்தின் உடல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிறிய கிருஷ்ணர் சிலையின் நெற்றியில் வைர நாமம் அணிவிக்கப்பட்டிருந்தது. வைணவர்கள் நெற்றியில் சந்தனம் இட்டுக் கொள்ளும் முறையில் இந்த ஆபரணம் அமைந்துள்ளது. இது 'நெற்றிப்பட்டம்' போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 108 ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இந்த ஆபரணத்தின் நடுவில் மாணிக்கம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடிகளாகும். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கப் பொருட்களிலிருந்தும் பெருமளவில் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதில் 9.75 பவுன் தங்கம் குறைவாக இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

​ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் முக்கியமான தங்க விளக்கும் பழுதுபார்ப்பு என்ற பெயரில் கடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ பத்மநாபசுவாமியின் கருவறையில் தீபாராதனைக்காக ஏழு தங்க இதழ்களைக் கொண்ட விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இது காணாமல் போயுள்ளதால், தற்போது வெள்ளி விளக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

​திருவனந்தபுரம் டி.சி.பி நகுல் ராஜேந்திர தேஷ்முக் நடத்திய சோதனையில் தங்கம் சிதறிக்கிடப்பது கண்டறியப்பட்டது. இவற்றை ஸ்ட்ராங் ரூமிற்கு மாற்ற வேண்டும் என்று அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. கோவிலில் இருந்து காணாமல் போன வெள்ளிக் கிண்ணம் சர்ச்சையானதை அடுத்து, கோவிலுடன் தொடர்புடைய ஒருவரின் ஓட்டுநர் அதைத் திருப்பி ஒப்படைத்தார். அரண்மனை குடும்பத்தினர் மட்டுமே நுழையும் 'செம்பகத்தும்மூடு' கதவு வழியாகவே திருடப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இங்கு எந்தவித சோதனையோ அல்லது ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகளோ இல்லை.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில்

கவடியார் கொட்டாரத்தில் (அரண்மனையில்) நடந்த திருட்டிற்கும் கோவிலில் நடந்த திருட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அரண்மனையுடன் தொடர்புடைய ஒருவரின் வங்கித் கணக்கிற்குப் பெருந்தொகை வந்துள்ளது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது.

​அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கோவில் நிர்வாக அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவில் எப்போதும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது என்றும், எந்தவொரு பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என்றும் கோவில் அதிகாரிகள் கூறுகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User