தேனி: `எம்.எல்.ஏ சீட் உறுதி' - திமுக நிர்வாகியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி; போலீஸ் விசாரணை!

Mar 20, 2026 - 15:30
 0
தேனி: `எம்.எல்.ஏ சீட் உறுதி' - திமுக நிர்வாகியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி; போலீஸ் விசாரணை!

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற திமுக உறுப்பினர் சுதாவின் கணவர் நாகலிங்கம். திமுக நிர்வாகியான இவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுகவில் விருப்பமனு அளித்திருந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமைக் கழகத்தில் இருந்து `தினேஷ்' பேசுவதாக கூறி ஆசிஃப் ராஜா என்ற நபர்  நாகலிங்கத்திடம் பேசியுள்ளார்.

அப்போது, வருகிற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்று தருவதாகவும் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். நாகலிங்கம் கொடுப்பதாக சொல்லியதும் மூன்று கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது.

தொடர்ந்து முன்பணமாக ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் அபுதாஹிர் என்பவரிடம் ஆசிஃப் ராஜா கூறியது போல் நாகலிங்கம் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கிடம், அபுதாஹிர் கொடுத்துள்ளார்.

அபுதாஹிர்

திமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்த நிலையில், நாகலிங்கத்திற்கு மட்டும் அழைப்பு வராமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம், இது குறித்து அபுதாஹிரிடம் கேட்டுள்ளார். அதற்கு, பணத்தை கார்த்திக் என்பவர் பெற்று சென்று விட்டதாக கூறிய அபுதாஹிர், அதன் பிறகு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீஸார் நாகலிங்கத்திற்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்துபோது, தினேஷ் என்கிற பெயரில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த  ஆசிஃப் ராஜா தான் நாகலிங்கத்திடம் பேசியுள்ளார் என்றும், அவருடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் அபுதாஹிர், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சீட் பெற்று தருவதாக நாகலிங்கத்திடம் பணத்தைப் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது,

ஆசிஃப் ராஜா

இதனை அடுத்து ஆசிஃப் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோரை தென்கரைப் போலீஸார் கைதுசெய்து ஆசிஃப் ராஜா வீட்டில் வைத்திருந்த 84 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அபுதாஹிரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திமுக-வில் சீட் பெற்று தருவதாக மூன்று பேர் மோசடியில் ஈடுபட்டது, பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0