"பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..." - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா

Apr 10, 2026 - 14:34
 0
"பிரபுதேவாவிடம் ரிஷியை நடிக்க கேட்டதும் அவர் கேட்ட கேள்வி..." - 'முதல் முதலாய்' இயக்குநர் டிரஸ்டினா

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'முதல் முதலாய்' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது.

இந்த ஆல்பத்தின் பாடலை எழுதியதோடு, இசையும் அமைத்திருக்கிறார் இயக்குநர் ரவிச்சந்திரன் ச்ரீநிவாஸ். இதற்கு முன் 'கண்ணெதிரே தோன்றினாள்', 'மஜ்னு' ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். ரிஷி தேவா- கைரா நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை இயக்கியவர் டிரஸ்டினா ஐசக்.

எம்.பி.பி.எஸ். மருத்துவரான டிரஸ்டினா, இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராகவும் இருந்தவர். ஆல்பம் உருவானது குறித்து டிரஸ்டினாவிடம் பேசினோம்.

ஹீரோயினுடன் டிரஸ்டினா
ஹீரோயினுடன் டிரஸ்டினா

``சின்ன வயசுல இருந்தே சினிமா கனவு இருந்தது. ஆனா, என்னோட அம்மாவுக்கு நான் மருத்துவம் படிக்கணும்னு விருப்பம் இருந்தது. அவங்களுக்காக லண்டன் எம்.பி.பி.எஸ்ஸைப் படிச்சு முடிச்சேன். ஆனாலும் சினிமா ஆசை இன்னும் அதிகமாகவே இயக்குநர் பாலாவிடம் 'அவன் இவன்' படத்துல உதவி இயக்குநரா இருந்தேன்.

அங்கிருந்த கொஞ்ச நாள்ல 'யாத்ரா'னு குறும்படம் ஒண்ணு இயக்கினேன். அதன் பிறகு கதைகள் எழுத ஆரம்பிச்சேன். சினிமா ரொம்ப எளிதான விஷயம்னு நினைச்சேன். ஆனா, உள்ளே வந்த பிறகுதான் இது ஒரு கடல்னு புரிஞ்சுக்கிட்டேன். காதல் ரொம்ப பிடிச்ச விஷயம். அதனால ஒரு அழகான காதல் கதையை இயக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கும் போது தான் 'முதல் முதலாய்' ஆல்பம் இயக்கற வாய்ப்பு அமைஞ்சது.

கைரா
கைரா

எனக்கு 'கண்ணெதிரே தோன்றினால்' ரவிச்சந்திரன் சாரை ரொம்ப வருஷமா தெரியும். ஒருநாள் 'இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்க'னு அனுப்பியிருந்தார். அது அவரே எழுதி இசையமைச்ச பாடல். நான் எதிர்பார்க்கற மாதிரியே ஒரு க்யூட்டான காதல் பாடலாக இருந்ததால அதையே பயன்படுத்தலாம்னு முடிவு செய்தோம்.

அவரின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது சந்தோஷமா இருக்குது. இந்த ஆல்பத்தின் ஹீரோவாக புதுமுகம் வேண்டாம். பிரபலங்களா இருக்கட்டும் அல்லது பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கட்டும்னு சொன்னதால, டீன் ஏஜ் பசங்கள் உள்ள பிரபலங்களின் பசங்க நிறைய பேரைப் பரிசீலிச்சோம்.

சிம்ரன் மகனும் ஹீரோ மாதிரி இருக்கார். அவரும் எங்க சாய்ஸில் இருந்தார். ஆனா, அவர் பாலிவுட் ஹீரோவா இருந்தார். எனக்கு இந்தக் கதைக்கு தென்னிந்திய முகமா வேணும், கொஞ்சம் வெள்ளந்தியான முகமுமாக இருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்னு தோணுச்சு.

படப்பிடிப்பில்
படப்பிடிப்பில்

அப்படி ஒருத்தரா ரிஷி தேவா இருந்தார். பிரபுதேவா சார்கிட்ட இந்த ஆல்பத்தின் கதையைச் சொன்னேன். 'ரிஷியை ஜனங்க ஏத்துப்பாங்களா'னு கேட்டார். ரிஷி நல்லா டான்ஸ் ஆடுவார்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஒரு மேடையில் கூட அப்பாவோட சேர்ந்து டான்ஸும் ஆடி கலக்கியிருக்கார்.

நான் எதிர்பார்த்த மாதிரியே ரிஷி இருந்ததால இந்த ஆல்பத்துக்குள் கொண்டு வந்துட்டோம். இப்ப ஆல்பம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். அதே மாதிரி ஹீரோயின் கைரா, ரொம்ப அழகா நடிச்சிருந்தார். மூணு மாசம் திட்டமிட்டதால, ரெண்டரை நாட்கள்ல மொத்த பாடலையும் ஷூட் செய்து முடிச்சிட்டோம். காஸ்ட்யூமையும் நானே வடிவமைச்சிருந்தேன்.

டிரஸ்டினா
டிரஸ்டினா

பிரபுதேவா சார் 'சிக்கு புக்கு' பாடல்ல அறிமுகமாகும் ஆடும் போது ஜி.வி.பிரகாஷ்தான் பாடியிருப்பார். இப்ப அவரது மகன் அறிமுக பாடலுக்கும் ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கார். இந்த ஆல்பத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் குருதேவ் சார், இதற்கு முன் ரவிச்சந்திரன் சாரோட பணியாற்றியிருக்கார். அடுத்து ஒரு காதல் கதையும். ஹீரோயின் சென்ட் ரிக்கும் இயக்க ரெடியாகிட்டு இருக்கேன்!'' என்கிறார் டிரஸ்டினா ஐசக்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0