"குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது..." - தவெக-வை ஆதரிக்க திருமா சொல்லும் காரணங்கள் என்னென்ன?

May 09, 2026 - 19:02
0
"குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது..." - தவெக-வை ஆதரிக்க திருமா சொல்லும் காரணங்கள் என்னென்ன?

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விசிக கணித்தப்படி தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

திமுகவுடனான கூட்டணியில் விசிக போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மக்கள் நலக் கூட்டணி உருவானதிலிருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறோம்.

இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில், இடதுசாரி கட்சிகளும், விசிக-வும் தொலைநோக்கு பார்வையோடு, எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு இணைந்தே முடிவெடுப்போம் எனக் கலந்து பேசி அறிவித்திருக்கிறோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

விசிக-வின் உயர்நிலைக்குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது. அதில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் தலைமை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. கலந்தாலோசித்து தவெக-விற்கு ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறோம்.

இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.

இன்றைய நடைமுறையில், எங்களால் விஜய் ஆட்சியமைக்க முடியாமல் போனது என்கிற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. எங்களால் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது. இதன் அடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறோம்.

நாங்கள், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான இந்தச் சூழலில், அரசியல் கட்சியாக எங்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.

இது எந்த வகையிலும், எங்களின் உறவைப் பாதிக்கும் என நாங்கள் நம்பவில்லை. ஆளுநர் விஜய்யைச் சந்திக்க மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போதிய இடங்கள் இல்லை என்று சொன்னார்கள். இப்போது ஆதரவையும் நல்கியிருக்கிறோம்.

குதிரை பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசியமைப்புச் சட்டத்தைப் பாதுக்காக்க வேண்டும். ஆளுநரைச் சந்தித்துவிட்டு, விசிக அலுவலகம் வருவதாக விஜய் சொன்னார். பதவியேற்பு நடந்துப் பிறகு வாருங்கள். இப்போது வர வேண்டிய கட்டாயம் இல்லை எனச் சொல்லியிருக்கிறேன். எங்களுடைய நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவர் எங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User