`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

Jun 18, 2026 - 16:00
0
`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணியினர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாதவர்கள், ஒரு எதிர்பாராத வெற்றி கிடைத்திருக்கிறது. ஜனநாயகத்தில் இப்படி வித்தியாசமான முடிவுகள் வருவது நல்லதுதான். புதிய ஆட்சியாளர்கள தமிழகத்தை அதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டு நிறுத்திய இடத்திலிருந்து, இன்னும் முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ​மீனவர்களுடைய பிரச்னை இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய விஷயம் என்பதை, நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டரீதியான முரண்பாடுகள், சட்டமீறல்கள் என்ற விவகாரத்தோடு சேர்த்து, மக்களுடைய வாழ்வாதாரம், மனிதாபிமானம் போன்ற விஷயங்களையும் கவனத்தில் எடுத்து, இந்த விஷயம் இருதரப்பில் இருந்தும் சில விட்டுக்கொடுப்புகளோடு தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

இலங்கை எம்.பி

எனவே, அதுசம்பந்தமான நடவடிக்கைகளில், தமிழ்நாடு மாநில அரசும், மத்திய அரசும், எங்களுடைய நாட்டு மீனவர் சமூகத்தோடும், தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தோடும் சேர்ந்து, சுமுகமான முடிவுகளை காண வேண்டும். இலங்கையில் விலைவாசி விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் கிடையாது. அது, நாளுக்கு நாள் ஏறிக்கொண்டுதான் செல்கிறது. ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது, சுமுகமாக முற்றுப்பெற்றாலும், இதன் தாக்கங்கள் சரியாக இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தி.மு.க-வாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றிக் கழகமாக இருந்தாலும் சரி, இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கிற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசோடு பேசித்தான் முடிவுகளைக் காண வேண்டும். மாநில மட்டத்தில் இருக்கிற இப்படியான உணர்வுபூர்வமான விஷயங்களை, மத்திய அரசும் கருத்தில் எடுத்து, இதற்கான சுமுகமான தீர்வுகளை இரண்டு தரப்பும் சேர்ந்து எங்களுடைய அரசோடு பேசி முடிவுக்குக் கொண்டு வருவதுதான் சாலச் சிறந்தது. அதற்கான ஒத்துழைப்புகளைச் சகல தரப்பினரும் வழங்கத் தயாராக இருக்கிறார்கள். இலங்கையில் கடன் சுமையை அதிகரிப்பதைத் சமாளிப்பதற்கு நாங்கள் எங்களுடைய ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும். அல்லது எங்களுடைய நாட்டிலே வெளிநாட்டு முதலீடுகளைக் கூட்ட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் அரசாங்கம் இப்பொழுது கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவின் தென்பிராந்தியத்தில் இருக்கிற இந்த மாநிலங்களிலிருந்து இலங்கையிலே முதலீடுகளைச் செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். அதற்கான ஊக்குவிப்புகளைத் தாராளமாகச் செய்வதற்கு எங்களுடைய அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, அதை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User