‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்?

Jul 03, 2026 - 00:31
0
‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்?

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். இன்று காலை மதுரையில் சவுராஷ்டிரா கல்லூரி விழாவில் ஆளுநர் அர்லேகர் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், "மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்.

மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஆளுநர் அர்லேகர். ஆளுநர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் அர்லேகருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா

இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஆளுநரை கண்டித்து பதிவிட்டிருக்கிறார். அதில் "ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.

மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில், அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் ,மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த தமிழக அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பதற்றத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம்.

உதயநிதி
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநரும் ஆய்வு செய்தததை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User