தவெக 6 மாத ஆட்சி: ``அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" - நாராயணன் திருப்பதி

Nov 12, 2026 - 14:30
0
தவெக 6 மாத ஆட்சி: ``அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" - நாராயணன் திருப்பதி

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இன்றுடன் 186 நாள்கள் ஆகிறது. புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், ஆட்சிக் களத்தைக் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே சில காலம் ஆகும். என்றாலும், தவெக வேட்பாளர்கள், குறிப்பாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போன்றோர் தேர்தல் பிரசாரங்களில் `6 மாசத்துல தமிழ்நாட்டையே எப்படி மாத்துறோம்னு பாருங்க' என உறுதியோடு பிரசாரம் செய்திருந்தனர்.

அதுபோலவே, ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் எதிரான நடவடிக்கைகள், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், தாய்மாமன் சீர், அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், முதற்கட்டமாக 3 இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பு, பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப் படை, போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை, விவசாயக் கடனில் பகுதி தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என முன்நகர்ந்து முதற்கட்ட நம்பிக்கையைப் பெற்றது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதேநேரம், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னடைவு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், செஞ்சி சிறுமி மாயமாகி 30 நாள்களைக் கடந்த நிலையிலும், தொடர் குழந்தைகள் கடத்தல் என காவல்துறையின் செயல்பாட்டில் சுணக்கம், மெத் போதைப்பொருள் விவகாரம், பாலியல் தொல்லை விவகாரம், ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் விவகாரம் என தொடர் சர்ச்சையில் சிக்கும் தவெக நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் என இன்னொருபக்கம் குற்றச்சாட்டுகளும் நீளுகிறது.

இதுதவிர, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மாற்றுக்கட்சியினரை சேர்த்துக்கொள்வது, குதிரை பேர விவகாரம், சர்ச்சையில் சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது, முதல்வரின் விமர்சனத்துக்குள்ளாகும் சில செயல்பாடுகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் போராட்டம், முதல்வர் செய்தியாளர்களைச் சந்திக்காதது என எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகளும் விமர்சிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது தவெக அரசு.

எனவே, தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் நம்மிடம் பேசிய பா.ஜ.க தலைமைச் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ``இந்த ஆறு மாத கால ஆட்சியில் தவெக அரசு ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து, தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் பின்னோக்கிச் சென்றுள்ளது.

நாராயணன் திருப்பதி

குறிப்பாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது பெரும் கவலைக்குரிய விஷயம். பொருளாதார ரீதியாகவும் இந்த அரசு பின்தங்கியுள்ளதாது. புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வியடைந்ததோடு, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீடுகளை மற்ற மாநிலங்களுக்குத் தாரை வார்த்துவிட்டது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள மிக முக்கியமான பிரச்னை. சரியான திட்டமிடல் மற்றும் நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தால், ஒரு அரசை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதைப் புரியாமல் ஆறு மாதங்களைக் கடத்தியிருக்கிறது. புதிய அரசு என்பதற்காக தவறுகளைக் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், ஒரு நாள் ஆட்சியில் ஏற்படும் தவறுகூட, மக்களை பெருமளவில் பாதிக்கும். அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களை இந்த அரசு வீணடித்துவிட்டது. மக்களுக்குத் தேவை உண்மையான செயல்பாடுகளைக் கொண்ட 'ரியல் மாடல்' (Real Model) அரசே தவிர, வெறும் விளம்பரங்களுக்கான 'ரீல் மாடல்' (Reel Model) அரசு அல்ல.

சட்டம்-ஒழுங்கு!

இந்தச் சூழலை அரசு சரியாக கையாளவேண்டுமானால், அரசு முதலில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். நிர்வாகத்தில் பல்வேறு புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியதும் அவசியம். குறிப்பாக, காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அந்தத் துறையை மிகச் சரியான முறையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முதலமைச்சரின் முக்கியக் கடமை. அதேபோல, மாநிலத்தின் எந்த ஒரு முக்கியப் பிரச்னைக்கும் அரசிடமிருந்து சரியான பதில் வருவதில்லை.

பொருளாதார ரீதியாக, தொடர்ந்து அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையை எவ்வாறு குறைப்பது என்பது தெரியாமல் இந்த அரசாங்கம் விழிபிதுங்கி நிற்கிறது என்பதே தற்போதைய எதார்த்தம். இந்த அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அரசு புதிய திட்டங்களைக் கொண்டு வருவதில் தவறில்லை என்றாலும், அதற்கான நிதியை எவ்வாறு செலவு செய்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்படுகிறது. அரசுத் திட்டங்களுக்காகத் தொடர்ந்து கடன் வாங்குவது மாநிலத்தில் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், தனிநபர் வருமானத்தைக் குறைத்து, சாமானிய மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்
வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்

ஒரு திட்டத்திற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. மாறாக, அந்தத் திட்டம் எவ்வளவு தரமாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். உதாரணமாக, இலவசப் பேருந்துப் பயணத்தை அறிவிப்பது மட்டும் போதாது. அந்தப் பேருந்துகள் முறையாக இயக்கப்படுகின்றனவா? பேருந்துகளின் தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே இலவசப் பேருந்துப் பயணத்தை வழங்கிவிட்டோம் என்று கூறுவதால் மட்டுமே போதாது. தினசரி எத்தனை பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன, அரசுப் பேருந்துகளில் மழை பெய்யும்போது உள்ளே தண்ணீர் ஒழுகுவதும், அதனால் ஏற்படும் சிரமமும் அரசுக்கு தெரியவேண்டும்.

தனியார் பேருந்துகள் சிறப்பாக இயங்குவதால், வசதிகள் அதிகமாக இருப்பதால் அதிக கட்டணம் வசூலிப்பதாக அமைச்சரே கூறுகிறார். அப்படியென்றால், அரசுப் பேருந்துகளின் தரம் சரியில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்வது போல அமைந்துள்ளது. எனவே, மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்கிவிட்டால் மட்டுமே ஒரு அரசின் கடமை முடிந்துவிடாது. `நல்ல அரசு' என்று முத்திரை குத்திவிட முடியாது. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும், அடிப்படை வசதிகளுடன் சுகமாகவும் வாழ்வதை உறுதி செய்வதே ஒரு சிறந்த நிர்வாகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்." என்றார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User