தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

Jun 16, 2026 - 20:31
0
தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்டா இப்படி அராஜகம் பண்றீங்க. வயிறு எரியுது நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க. அராஜகம் செய்றதை பாருங்க' என அந்தப் பெண்ணின் கதறலுக்கு கொஞ்சமும் மனம் இறங்காமல் வீட்டை சேதப்படுத்துகிறது அந்தக் கும்பல்.

கதறும் பெண்

இது குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்தவர்கள், `குடியிருக்கும் வீட்டை இப்படி அடித்து நொறுக்கலாமா, வீட்டுக்குள் ஆள் இருக்கிறார்கள். டி.வி உள்ளிட்ட பொருள் எல்லாம் இருக்கு. இப்படி அநியாயம் செய்திருக்கிறார்களே' என்று பதைபதைத்தனர். அந்தப் பெண்ணுக்காக பரிந்து பேசினர். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அண்ணன் தங்கைக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தங்கை தரப்பு வீட்டை சூறையாடியதாகச் சொல்கிறார்கள். இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``தஞ்சாவூர், ஆடக்கார தெரு மானம்புச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் கோபால். இவருடைய தங்கை மகாலட்சுமி. இருவருக்குமிடையே கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சொத்து தகராறு நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக அடித்து நொறுக்கப்பட்ட வீடு தொடர்பாக பிரச்னை நீடித்து வந்துள்ளது.

அடித்து நொறுக்கப்பட்ட வீடு

இந்த சொத்திற்கு வாரிசுதாரர்கள் யாரும் இல்லாததால் இருத ரப்பினரும் உரிமை கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு குறிப்பிட்ட இந்த வீடு மகாலட்சுமிக்கு சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மகாலட்சுமி வீட்டில் குடியிருந்த கோபாலை காலி செய்யச் சொல்லியிருக்கிறார். மேலும், `இந்த வீடு எனக்கு சொந்தம் என நீதிமன்றம் சொல்லி விட்டது. வீட்டை பூட்ட வேண்டும், வெளியேறுங்கள்' என்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இப்பிரச்னையில் தலையிட்ட அக்கம் பக்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக கோபாலை வெளியேற்ற வேண்டாம், அவர் குடும்பத்தினருடன் எங்கு போவார் என்று மகாலட்சுமியை சமாதானம் செய்துள்ளனர். ஆண்டுகள் கடந்த பிறகும் வீட்டை காலி செய்யாத கோபால், பல்வேறு காரணங்களைச் சொல்லி அங்கேயே குடியிருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, சில தினங்களுக்கு முன்பு அண்ணாதுரை மற்றும் தனக்கு சொந்தமானவர்களை அழைத்துக் கொண்டு வந்து வீட்டை சூறையாடியிருக்கிறார்" என்றனர்.

வீடு

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பதைபதைக்கச் செய்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அண்ணாதுரை உள்ளிட்ட 8 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதில் ஈடுபட்ட சுரேஷ்(55), ராஜா(37) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User