டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?" - சாடும் ராகுல் காந்தி!

Jun 17, 2026 - 17:32
0
டெலிகிராம் தடை: ``திருடனைப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டுவதா?"  - சாடும் ராகுல் காந்தி!

சமீபத்தில் நடந்த நீட்-யுஜி (NEET-UG 2026) தேர்வுகளின் வினாத் தாள் கசிந்த விவகாரமும், அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரமும் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மறுத்தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தது. இதையொட்டி, தேர்வு முறைகேடுகள் மற்றும் வதந்திகளைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து டெலிகிராம் செயலி நீக்கப்பட்டதுடன், இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் அதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ``வினாத்தாள் கசிவைத் தடுக்க மோடி அரசு கண்டுபிடித்துள்ள புதிய வித்தை தான் இந்த 'டெலிகிராம் தடை'. அதாவது, திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குப் பூட்டுப் போடுகிறார்கள்.

டெலிகிராம், வாட்ஸ்அப்

லட்சக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகளாக டெலிகிராம் மூலம் தங்களின் பாடக்குறிப்புகள் (Notes), மாதிரித் தேர்வுத் தொடர்கள், கலந்துரையாடல்கள் எனத் தேர்வுக்காகப் படித்து வருகிறார்கள். அவர்களின் அந்தப் படிப்பு வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்கு தீர்வாகும்?

இந்தத் தடை முழுமையானது அல்ல என்பது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தெரியும். வினாத்தாளைக் கசிய விடுபவர்களுக்கும் தெரியும். அப்படியிருக்க, அடுத்த தடை எதன் மீது? வாட்ஸ்அப் மீதா? தேர்வு நாளில் மாணவர்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள். கத்தரிக்கோலால் சட்டப் பைகள் வெட்டப்படும். விமானப்படை மூலம் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். இந்த நாடகங்களுக்குப் பஞ்சமிருக்காது.

ஆனால், நோயின் வேரை அழிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏனெனில் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் இந்த அரசின் நிழலில் தான் செழித்து வளர்கிறார்கள். இளைஞர்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறார்கள். மோடி அவர்களே, இந்த நாடகங்களை நிறுத்துங்கள். மாணவர்களை அல்ல, மாஃபியாக்களைத் தாக்குங்கள். மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்க்காவிட்டால், நாட்டின் இளைஞர்களுக்குத் தங்களின் உரிமைகளைப் பறிக்க நன்றாகவே தெரியும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User