தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: கால்நடைகள் பெருக, வேலை கிடைக்க, செல்வம் சேர அருளும் தலம்!

Apr 6, 2026 - 09:01
 0
தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: கால்நடைகள் பெருக, வேலை கிடைக்க, செல்வம் சேர அருளும் தலம்!

தமிழக கிராமங்கள்தோறும் முறுக்கு மீசையும் மிரட்டும் விழிகளுமாகக் காட்சி அருள்வார் ஐயனார். ஊரைக்காக்கும் கடவுளாக அவர் எழுந்தருள்வதால் அந்தத் திருவடிவம் நமக்கு பயம் தராமல் அபயத்தையே தரும்.

அப்படிப்பட்ட ஐயனாரே லிங்க ரூபமாக அருளும் தலம் ஒன்று உண்டு. அதுதான் அல்லிநகரம்.

தேனியின் ஓர் அங்கம் அல்லிநகரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஓடைக்கரையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில்தான் ஐயனார் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

அந்த இடத்துக்குப் போனாலே மனம் லேசாகிவிடும். அந்த அளவுக்கு ஓடை நீரின் சலசலப்பு, பறவைகளின் சத்தம் என அந்த இடமே மிக ரம்மியமாக இருக்கும். இங்கேதான் ஐயனாரின் கோயில் அமைந்திருக்கிறது.

இவரது திருநாமம், வீரப்ப ஐயனார். அவரின் எதிரில் கருப்பசாமி. இடதுபுறத்தில் தேவியருடன் அருளும் முருகனின் சந்நிதி. கோயில் வளாகத்தில் குதிரை மீது அமர்ந்திருக்கும் ஐயனாரையும் தரிசிக்கலாம்.

அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்
அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்

முன்னொருகாலத்தில் சுற்றுவட்டாரத்து மாடுகள் மேய்ச்சலுக்கு வரும் பகுதி இது. அப்படி வந்த பசுக்களில் ஒன்று, இங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்துபோனதாம்.

இந்த நிலையில், அருகிலுள்ள வாழையாத்துப் பட்டி கிராமத்துக்குச் சிலர், அன்னஞ்சி கிராமம் மற்றும் இந்தக் கோயில் இருக்கும் பகுதி வழியாக வியாபாரத்துக்குப் பால் கொண்டு வருவவார்கள். அப்படி அவர்கள் வரும்போது, குறிப்பிட்ட இடத்தில் தினமும் ஏதோவொரு காரணத்தால் கீழே விழுந்து பால் முழுவதும் தரையில் கொட்டு வது வழக்கமாகியிருக்கிறது.

இதனால் அல்லிநகரம், வாழையாத்துப் பட்டி, அன்னஞ்சி கிராமம் மக்கள் ஒன்றிணைந்து பேசினார்கள். பசுமாடு மறைந்து போனது, தினமும் பால் கொட்டுவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள், தினமும் பால் கொட்டும் இடத்தைத் தோண்டினர். அப்போது, மண்ணில் இருந்து பால் பொங்கிப்பெருகியதாம்.

எல்லோரும் திகைத்து நிற்க, கூட்டத்திலிருந்த சிறுமி ஒருத்திக்கு அருள்வந்தது.

"நான் வீரப்ப ஐயனார். இங்கே சுயம்புலிங்கமாய் அருள்பாலிப்பது நானே. எமக்கு ஆலயம் அமைத்து பால் சமர்ப்பித்து வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் தருவேன். உங்கள் கால்நடைகளையும் பாதுகாப்பேன்’’ என்று அருள்பாலித்தார் ஐயனார். அப்போது உருவானதுதான் இந்தத் திருக்கோயில் என்கிறார்கள்.

அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்
அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்

சுமார் 500 ஆண்டுகள் பழைமையான வீரப்ப ஐயனார் கோயில் தேனி சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் பிரசித்தம். சித்திரைத் திருவிழா இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய விழாக்களும் கோலாகலமாக நடைபெறும்.

ஐயனாருக்குத் தினமும் காலை 7 மணிக்கு நாட்டு மாட்டுப் பாலால் அபிஷேகம் நிகழும். தொடர்ந்து பன்னீர், மஞ்சள், அரிசி மாவு, இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு, வில்வப்பொடி, பஞ்சாமிர்தம் எனப் பலவகைத் திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அலங்கார ஆராதனைகள் 8 மணிக்குள் நிறைவேறும்.

பெளர்ணமி தினங்களில் இரவு 8 மணிக்கு சிறப்புப் பூஜை உண்டு. வீரப்ப ஐயனாருக்குச் சமர்ப்பிக்கப்படும் சர்க்கரைப் பொங்கல் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது.

பங்குனி - சித்திரை மாதங்களில் விழாக் கோலம் காண்கிறது வீரப்ப ஐயனார் கோயில். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பாற்குடங்கள் வருமாம். பங்குனி 15 -ம் நாள் கொடியேற்றத்துக்கு யானை ஊர்வலம் நடக்கும். பங்குனி மாதம் நிறைவு நாளன்று, குதிரை வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் வீரப்ப ஐயனார், தன் மூத்தவரான சோலை மலை ஐயானரைத் தரிசித்துவிட்டு வருவார்.

வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஐயனார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

கால்நடைகளைக் காக்கும் தெய்வம் வீரப்ப ஐயனார். ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகள் நோய்நொடியின்றி பாதுகாப்பாக இருக்கவும், அவை கன்றுகள் குட்டிகள் ஈன்று செழிப்படையவும் அருள்பாலிக்கிறார் வீரப்ப ஐயனார்.

அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்
அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்

தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரைத் தரிசித்து வேண்டி வழிபட்டு, அவரின் சந்நிதியில் வில்வ இலை, எலுமிச்சைப் பழம் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல் வேலை வாய்ப்பு வேண்டியும் பிணிகள் தீரவும் இந்த ஐயனாரை மனமுருக வழிபட்டுச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் மீண்டும் வந்து நன்றிக்கடன் செலுத்துகிறார்கள்.

கோயிலில் அருளும் கருப்பருக்குக் கிடா, சேவல் பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் பலித்ததும் நேர்த்திக்கடனை பயபக்தியுடன் செலுத்துகிறார்கள்.

கோடையில் சுற்றுலாவுக்காகத் தேனி செல்லும் அன்பர்கள் வாய்ப்பிருந்தால் வீரப்ப ஐயனாரையும் தரிசித்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும்... வளமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0