50 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்டும் 'சூப்பர் எல் நினோ' - அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
50 ஆண்டுகளுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் உருவாகும் சூப்பர் எல்நினோ (Super El Nino), 2026-ல் உலகளாவிய காலநிலை மாற்றத்தையும், அதீத வெப்பத்தையும் ஏற்படுத்தி, தென்மேற்கு பருவமழையை வெகுவாகக் குறைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தவிர மிக வேகமாக உருவாகி வரும் இந்த 'சூப்பர் எல் நினோ', இந்த நூற்றாண்டின் மிக வலிமையான இயற்கை நிகழ்வாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் 'சூப்பர் எல்நினோ'
2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த 'எல் நினோ' மாற்றங்கள் 1876-ல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சமயத்தில் 6 கோடி மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
பசிபிக் கடலின் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்து, உலகின் மழைப்பொழிவின் வடிவமைப்பை மாற்றியது. இதனால் உணவுப்பஞ்சம், நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
தற்போது உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸை தாண்டும். இதன் காரணமாக முந்தைய 'எல்நினோ'வை விட, சக்திவாய்ந்த 'சூப்பர் எல்நினோ', 2026-ன் பிற்பகுதியில் நிகழும்.
இதனால் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என வாஷிங்டன் பல்கலை ஆய்வு எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் 'சூப்பர் எல் நினோ' பாதிப்புகளைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

உணவு உற்பத்தி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், " 'சூப்பர் எல்நினோ'-வால் உருவாக இருக்கும் பாதிப்புகளுக்கு அரசாங்கம் முழுமையாகத் தயாராக வேண்டும்.
ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால் 1876-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உணவு உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தது.
அதனால், பஞ்சம் ஏற்பட்டபோது நிறைய பேர் உயிரிழந்தார்கள். ஆனால், இன்று நமது உணவு உற்பத்தி அதிகமாக உள்ளது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிட்டத்தட்ட 600 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் அரிசியும் சேமித்து வைத்துள்ளோம். எனவே, பஞ்சம் மற்றும் பட்டினியால் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள். எனினும், தற்போதைய சூழலில் கடுமையான வெப்ப அலைகளும் ஏற்படுகின்றன.
இத்தகைய சூழலில், கடுமையான வெப்பத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.
சமுதாய நலக்கூடங்களில் ORS...
கோடைக்கால வெயிலைச் சமாளிக்க, சமுதாய நலக்கூடங்களைத் திறந்து அங்கு உயிர் காக்கும் உப்புச் சர்க்கரைக் கரைசலை (ORS) வைக்க வேண்டும்.
முறையான தங்குமிடம் இல்லாதவர்கள் இந்த சமுதாய நலக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவர்கள் அங்குத் தங்கலாம்.
இக்காலகட்டத்தில் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகள் எதையும் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது.
மருத்துவர்களுக்குப் பயிற்சி
அரசு மருத்துவமனைகளில் வெப்ப தாக்கத்தைக் (Heat stroke) கையாளுவதற்கான மருந்துகளையும், தேவையான பிற வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் ஒரு நோயாளி வெப்ப தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஆரம்பக்கட்ட மருத்துவர்கள் கண்டறிவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

பணி மருத்துவர்களுக்குப் பயிற்சி
ஒரு நோயாளி மருத்துவமனைக்குச் சென்றால், முதலில் அவரைப் பரிசோதிப்பது பணி மருத்துவர் (Duty doctor) தான். அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார்கள்.
எனவே, அவர்களுக்கு வெப்ப தாக்கத்தின் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான சிறப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)