10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

Mar 11, 2026 - 14:31
 0
10ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் - அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை கடித்த வெறி நாய்!

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக இன்று காலை பள்ளிக்கு சென்றனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பள்ளி அருகே பெரியதெருவில் சாலையில் குரைத்து கொண்டு ஓடிய நாய், நடந்து சென்ற பத்துக்கும் மேற்பட்டோரை கடித்தது. இதையடுத்து சாலையில் ஓடிய வெறி நாய், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.

நாய் கடித்ததில் ஏற்பட்ட காயம்

அப்போது, படித்து கொண்டிருந்த ஆறு மாணவிகளை கடித்தது. மற்ற மாணவிகள் பயத்தில் அலறி அடித்து வகுப்புக்குள் ஓடினர். கடிப்பட்ட மாணவிகளும் தேர்வு தொடங்க உள்ள நிலையில் நாய் கடித்ததை நினைத்து கலங்கியதுடன் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து, வெறிநாய் கடித்த 6 மாணவிகளும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உடனடியாக மாணவிகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகளும் தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினர். வெறி நாய் கடிக்கும் தகவல் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பணியாளர்கள் வலை மூலம் வெறி நாயை பிடித்தனர்.

நாயை பிடித்த பட்டுக்கோட்டை நகராட்சி ஊழியர்கள்

வெறி நாய் கடித்து குதறிய 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னாள் எம்.எல்ஏ. சி.வி.சேகர் உள்ளிட்டோர் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டதுடன், மாணவிகளின் பெற்றோரையும் நேரில் சந்தித்து பேசினார். இதனிடையே தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை, டாக்டர்கள் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0