வெற்றி அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்; ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் முன்னிலை!
சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து தரிசனம் செய்து இத்தலத்தின் மகிமைகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் இந்த விநாயகர் காரியத் தடைகளை அகற்றி வெற்றியைக் கொடுப்பார் என்பதை உணர்ந்த மகாபெரியவர் 1975 - ம் ஆண்டு, ''இந்த ஸ்வாமிக்கு ஸ்ரீவிஜயகணபதின்னே பேர் வைங்கோ'' என்று திருநாமம் சூட்டி அருளினார். மேலும் இந்த விநாயகர் தெற்கு நோக்கு எழுந்தருளியிருப்பதால் தட்சிணாமூர்த்தியின் அம்சம் என்றும் கூறியருளினார். அன்றுமுதல் இன்றுவரை இந்த விநாயகர் உள்ளகரத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.

கவலையோடு இந்த விநாயகரின் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் அக்கவலைகள் தீர வழிபிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
குறிப்பாக நல்ல வேலை கிடைக்காதவர்கள், பார்க்கும் வேலையில் பிரச்னை இருக்கிறது என்று வருந்துபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து விஜயகணபதியைத் தரிசனம் செய்து அவருக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபட்டுச் சென்றால் கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் விலகும் என்பது நம்பிக்கை.
பிள்ளையார் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிரியமானவர். இந்தப் பிள்ளையாரை நிறைய குழந்தைகள் பிரியத்துடன் வந்து வழிபட்டுச் செல்வர். அப்படித் தன்னை வந்து வணங்கும் குழந்தைகளுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் கொடுத்துப் பேரும் புகழும் அடைய வைப்பார் இந்த விநாயகர் என்கிறார்கள். மேலும் இந்தப் பகுதி மிகவும் சிறப்புடன் திகழக் காரணமும் இந்த விஜயகணபதிதான் என்கிறார்கள் ஊர் மக்கள்.
இந்த ஆலயத்தில் மூலவராக விநாயகர் எழுந்தருளியிருக்க ஸ்ரீவிஜயகுமாரசுவாமி, ஸ்ரீ விஜயராகவர், ஸ்ரீ விஜய மணிகண்டர், ஸ்ரீவிஜயதுர்கா, ஸ்ரீவிஜயமாருதி மற்றும் நவகிரகங்கள் ஆகியோரும் சந்நிதிகொண்டு அருள்கின்றனர்.
இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று 22.6.1994-ம் ஆண்டுமுதல் தினமும் இங்கே மகாகணபதி ஹோமம் நடைபெற்றுவருகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்வதே மிகவும் சிறப்பான ஒன்று. இதில் கலந்துகொண்டு வழிபாடு செய்ய சகலவிதமான பிணிகளும் விலகும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெருமையும் மகிமையும் வாய்ந்த விஜய கணபதி ஆலயத்தில் வரும் 18 ம் தேதி காலை 010.30 முதல் 11.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தக் கும்பாபிஷேகத்தை காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்திவைக்க இருக்கிறார்.
மிகவும் சிறப்பாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று நிகழ இருக்கும் இந்தக் கும்பாபிஷேக நிகழ்வைத் தரிசிப்பதும் அதில் பங்கு கொள்வதும் மிகவும் புண்ணியம் தரும் செயலாகும். குருவருளும் திருவருளும் தரும் கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தரிசிப்பதே நம் வினைகளை நீக்கும். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீவிஜயகணபதியின் அருளைப் பெறலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)