`Sms கூட வரல...'- வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து ரூ.35 கோடி அபேஸ்? - உ.பி வங்கியில் அதிர்ச்சி!

Oct 29, 2026 - 13:30
0
`Sms கூட வரல...'- வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து ரூ.35 கோடி அபேஸ்? - உ.பி வங்கியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சோதித்தபோது அதில் கணிசமான தொகை குறைந்து இருந்தது. இந்த செய்தி மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பரவியது. அவர்களும் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சோதித்துப் பார்த்தபோது அதில் பணம் குறைந்து இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர்.

உடனே பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டு, கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து குறைந்த பணத்தை மீண்டும் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். இது குறித்து வாடிக்கையாளர் விஜேந்திர சிங் கூறுகையில், ``எனது வங்கிக் கணக்கில் ரூ.88 லட்சம் இருந்தது. ஆனால் இப்போது வெறும் ஒரு லட்சம் மட்டும் இருக்கிறது.

எங்களுக்கு தெரியாமல் பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு எஸ்.எம்.எஸ் தகவலும் வரவில்லை'' என்று தெரிவித்தார்.

மற்றொரு கணக்கு வைத்திருப்பவரான ஹனீப் கான் இது குறித்து கூறுகையில், "எனது சேமிப்புக் கணக்கில் ரூ.39 லட்சம் இருந்தது. ஆனால் இப்போது அதில் எதுவும் காட்டப்படவில்லை. நான் எந்தச் செய்தியையும் பெறவில்லை அல்லது நிதிப் பரிமாற்றத்தை அங்கீகரிக்கும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை" என்று கான் கூறினார். மற்றொரு வாடிக்கையாளரான ஜாகிர் இது குறித்து கூறுகையில், தனது கணக்கில் இருந்து ரூ.9.5 லட்சம் காணாமல் போனதாக குற்றம்சாட்டினார். பரிவர்த்தனைகள் குறித்து தனக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்றும், வங்கிக்குச் சென்ற பிறகு முறைகேடுகள் நடந்ததை அறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இப்பிரச்னையால் இப்போது வங்கிக் கணக்கு விவரம் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கொடுக்க மறுத்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் சுமார் 35 கோடி ரூபாய் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக இதுவரை 18 வாடிக்கையாளர்கள் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளனர். இப்புகார்களைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் கிளை மேலாளர் உட்பட 5 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதோடு கிளை ஊழியர்களை பணியிட மாற்றமும் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி உறுதி அளித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User