வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

Oct 29, 2026 - 09:00
0
வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

தென் தமிழகத்தில், பழநிக்கு இணையான தலம் தென்காசிக்கு அருகே உள்ள திருமலைக்கோயில். இங்குள்ள திருக்கோயிலில் திருப்பணி செய்து வந்தவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீனைச் சேர்ந்தவர்கள்.

தம் செல்வங்களை எல்லாம் கோயில் திருப்பணிகளுக்கும் பொது சேவைகளுக்கும் வாரி வாரி வழங்கியவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீன் வம்சத்தினர்.

அவர்கள் திருமலைக்கோயிலும் பழநியைப்போலவே புகழ்பெற்றுத் திகழவேண்டும், பழநியில் உள்ளதைப்போலவே திருமலைக் கோயிலிலும் தமிழ்க் கல்வி நிலையம் அமைய வேண்டும் என்று விரும்பினர். இதற்காக மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்ச்சங்கத்தினர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பழநி வாலசுப்பிரமணிய கவிராயரால் மட்டுமே அற்புதமான தமிழ்ப்பணியைத் தந்து திருமலைக்கோயிலைப் பெருமைகொள்ளச் செய்யமுடியும் என்று முடிவெடுத்து அவரை அணுகினர்.

தென்காசி  வால சுப்பிரமணியர் ஜீவசமாதி கோயில்
தென்காசி வால சுப்பிரமணியர் ஜீவசமாதி கோயில்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, பழநியில் முருகப்பெருமானுக்குத் தொண்டு செய்துவந்த அடியவர் பரம்பரையில் பிறந்தார் வால சுப்ரமணியர். வடகரை ஜமீன் வம்சத்தினரின் கோரிக்கையைக் கேட்ட வால சுப்பிரமணிய கவிராயர், ‘எல்லாம் முருகன் செயல்’ என்று வியந்தார்.

தமிழ் தோன்றிய பொதிகை மலையில் அகத்தியரின் சுவடுகள் இருக்கும் இடத்துக்குப் பயணம் செய்யவும் அவருக்குள் ஆசை பிறந்தது. இந்த ஆசை சொக்கம்பட்டி ஜமீன்தார் மூலம் நிறைவேற்றப்பட்டது.

கவிராயரை திருமலைக் கோயிலுக்கு மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வந்தார்கள். திருமலைக் குன்று மீது வீற்றிருக்கும் குமரனைத் தரிசனம் செய்தார் கவிராயர். அவர் உள்ளமெல்லாம் பூரிப்பு அடைந்தது. தினமும் திருமலை முருகப்பெருமானை வழிபட்டுத் தமிழ்ப் பணியினைத் தொடர்ந்தார்.

திருமலைக்கோயிலை ஒட்டிய பகுதிகள் செழுமையானவை. தவறாது மழை பெய்து முறையாக விவசாயம் நடைபெறும் என்பதால் மக்களின் வாழ்வும் அங்கே செழுமையாக இருந்தது. ஒரு நாள் கவிராயரின் மனதில் ஏனோ சஞ்சலம். அந்த ஊர் மக்களை அழைத்தார்.

சீக்கிரம் இந்தப் பகுதிக்கு வறட்சி ஏற்பட இருக்கிறது. எனவே முருகனை வேண்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள் என்று சொல்லிச் சென்றார்.

கவிராயரை அழைத்து அதுபற்றிக் கேட்டார் ஜமீன்தார்.

“அந்தத் திருமலை முருகன் சொன்ன மொழி அது” என்றார் கவிராயர்.

மன்னன் விடவில்லை. “நீங்கள் சொல்வது நடக்கும் என்றால் உங்களால் பட்டுப்போன புரசு மரத்தினைப் பூத்துக் குலுங்கச் செய்ய முடியுமா?” எனக் கேட்டார். இதைக் கேட்டதும் அவையினர் கலங்கினர். கவிராயரோ புன்முறுவலோடு சவாலை ஒப்புக்கொண்டார்.

அன்று இரவு கவிராயரின் கனவில் இறைவன் தோன்றி “திருக்குற்றாலம் சென்று சித்திர சபையில் பாடினால் உன் வேண்டுதல் பலிக்கும்” என்றார். அதன்படியே கவிராயர் திருக்குற்றாலம் சித்ர சபையை அடைந்தார். அங்கு, நூறு பதிகங்களைக் கொண்ட ‘சித்ரசபாபதி மாலை’ என்ற நூலினைப் பாடினார்.

ஒவ்வொரு பதிகத்திலும் திருச்சபாபதியினை வேண்டியும் அவர் திருவிளையாடல்களைப் போற்றியும் வணங்கிப் பதிகம் பாடினார். அன்று இரவு திருக்குற்றாலத்தில் தங்கியிருந்தபோது அவர் கனவில், “புரசம் பூத்து விட்டது. போய் பார்’ என்று இறைவன் உத்தரவிட்டார்.

கவிராயர் உடனடியாகப் புறப்பட்டு கிருஷ்ணாபுரத்துக்கு வந்தார். அங்கே மரத்தைச் சுற்றி மக்கள் நின்றனர். பட்டுப்போன பூவரசம் பூத்துச் செழித்திருந்தது. அந்தக் காட்சியைக் கண்ட கவிராயர் சிலிர்த்துப்போனார். செய்தி அறிந்து வந்த ஜமீன்தார் வியந்தார். கவிராயருக்கு நிலங்கள் பலவற்றை மானியங்களாக வழங்கினார்.

ஆனால் இவற்றால் எல்லாம் கவிராயர் கடுகளவும் பெருமிதம் கொள்ளவில்லை. இது முருகன் நிகழ்த்திய அற்புதம் என்று இறைவனையே சிந்தித்திருந்தார். நாளுக்கு நாள் அவர் ஸித்தி பெருகியது. அவரிடம் ஆசி பெற்றுச் செல்பவர்கள் வாழ்க்கை மாறியது. செல்வம் சேர்ந்தது. நோய்கள் நீங்கின. விஷ சந்துக்களின் தொந்தரவுகள் நீங்கின.

கவிராயருக்கு எப்போதும் திருமலையையே பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் ஆசை. ஆகவே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பட்ட மரம் பூத்து குலுங்கிய இடத்திலேயே தங்கினார்.

ஒரு முறை பழநிக்குப் பாதயாத்திரை போய்வந்தார். திரும்பி கிருஷ்ணாபுரம் வந்து தங்கினார். பின்பு அவரின் அணுக்க பக்தரான சபாபதி நாயகரிடம், “வைகுண்ட ஏகாதசியன்று ஜீவ சமாதி அடைவேன்” என்று கூறினார். அதேபோன்று அவர் அமர்ந்து திருமலை முருகனைத் தியானிக்கும் அந்த இடத்திலேயே அமர்ந்த நிலையில் ஜீவசமாதி அடைந்தார்.

இன்றும் கவிராயரின் ஜீவசமாதியைத் தரிசனம் செய்ய பக்தர்கள் அநேகம் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் எல்லாம் வால சுப்பிரமணிய கவிராயர் அற்புதங்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்.

இவர் சமாதி அருகே புரசு மரம் தற்போதும் உள்ளது. இங்கே கவிராயர் அருளிய சித்திர சபாபதி மாலையைப் பாராயணம் செய்கிறார்கள். இதனால் இப்பகுதி வறட்சியின்றி செழிப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனநோய் நீங்க இந்த நூல் அருமருந்து என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள்.

கவிராயரின் ஜீவசமாதிக்கு வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், திருமணத் தடைகள் நீங்குகின்றன, கல்வியில் மேன்மை கிடைக்கிறது. மேலும் இங்கு வந்து வழிபட்டுவிட்டு விவசாயப் பணிகளைத் தொடங்குவதை இவரின் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒருமுறை சமாதியை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கவிராயரின் உடல் கெடாமல் இருந்த அதிசயத்தினை மக்கள் கண்டு வியந்தனர். எனவே கவிராயர் இன்றும் சூட்சுமமாகவும் சொருபமாகவும் இங்கே வாழ்கிறார் என்பது நம்பிக்கை. வாய்ப்பிருப்பவர்கள் இங்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்; கவிராயரின் அருளால் சகல நன்மைகளும் கூடும்.

எப்படிச் செல்வது ?: தென்காசியிலிருந்து 18 கி. மீ தொலையில் உள்ளது கடையநல்லூர். இவ்வூரின் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் கற்பக சுந்தர விநாயகர் கோயில் அருகில் உள்ளது ஜீவசமாதிக் கோயில்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User