திருமண வரம் தரும் திருத்தலத்தில் சக்திவிகடன் நடத்தும் விளக்குப்பூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

Jul 09, 2026 - 11:32
0
திருமண வரம் தரும் திருத்தலத்தில் சக்திவிகடன் நடத்தும் விளக்குப்பூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

சக்தி விகடன் மாதம்தோறும் அற்புதமான திருக்கோயில்களில் திருவிளக்குபூஜை நடத்துவது வழக்கம். விளக்கேற்றி வழிபட்டால் சகல தெய்வங்களையும் ஆராதனை செய்த பலன் கிடைக்கும். அதுவும் வெள்ளிக்கிழமை மாலைவேளையில் விளக்கேற்றி அந்த ஆதிசக்தியை வழிபட்டால் சகல சுபங்களும் தேடிவரும்.

திருவிளக்கில் அன்னை பராசக்தியும் மஹாலட்சுமியும் சரஸ்வதியும் இணைந்து எழுந்தருளி நமக்கு ஆசீர்வாதம் செய்வர். இதன் மூலம் நம் வினைகள் தீரும். விருப்பங்கள் நிறைவேறும். அதுவும் அருள் நிறைந்த ஆலயத்தில் நூற்றுக்கணக்கான சுமங்கலிகளும் கன்னிப்பெண்களும் இணைந்து விளக்குபூஜை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் பலன் அற்புதமானது. அப்படி ஒரு விளக்குபூஜை நாளை (10.7.26) அன்று குத்தாலம் ஆதிகேசவபெருமாள் கோயிலில் நடைபெற இருக்கிறது.

இந்தத் தலத்தின் மகாத்மியம் பெரியது. அரியும் அரனும் சொக்கட்டான் விளையாட, அம்பிகை நடுவராக அமர்ந்தாள். ஆட்டம் முடிந்ததும், தமது சகோதரரான திருமாலே வெற்றி பெற்றதாக அறிவித்தாள் அன்னை. அந்தத் தீர்ப்பு சிவபெருமானின் திருவுளத்திற்கு உகந்ததாக இல்லை.

குத்தாலம் ஆதிகேசவபெருமாள் கோயில்

“அஞ்ஞானத்தால் பாரபட்சமாகத் தீர்ப்பளித்தாய். ஆகையால் அஞ்ஞானத்தின் அடையாளமான பசுவுருவில் பூலோகத்திற்குச் சென்று தவம் செய்து மீண்டும் என்னை அடைவாய்!” என்று அம்பிகைக்குச் சாபமளித்தார்.

அன்னை பசுவாக பூமிக்கு வந்தாள். அவள் மட்டுமா? அன்னையைத் தொடர்ந்து விநாயகர் பசுங்கன்றாக ஓடி வந்தார். திருமகள், கலைமகள் உள்ளிட்ட சகல சக்திகளும் பசு வடிவம் பூண்டு பின்னால் வந்தனர். இத்தனை சக்திகளும் பூமியில் தனியே உலா வருவதைக் கண்டு, அவர்களுக்குக் காவலனாகத் தாமும் பசுமேய்ப்பர் கோலத்தில் அவதரித்தார் திருமால்.

இதன் பின்னணியில் ஓர் அற்புதமான அருள் ரகசியம் உள்ளது. ஆம்! சக்திகளின் திருவடிகள் பட்ட இடமெல்லாம் புண்ணியத் தலங்களாகி, எதிர்காலத்தில் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்பதே இந்தத் திருவிளையாடலின் நோக்கம்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

பசுவுருவில் இருந்த அம்பிகை காவிரிக் கரையில் பல சிவத் தலங்களில் சிவபூஜை செய்தாள். தேரழுந்தூர், அசிக்காடு, மாந்தை, கோமல், ஆனாங்கூர், திருக்கோழம்பம், கரைகண்டம், திருவாவடு துறை என பல தலங்கள் இந்தப் புராணத்துடன் இணைந்துள்ளன.

இந்தத் தலங்களில் - பெரும்பாலான இடங்களில், கையில் சாட்டையுடன் பசுவைக் காக்கும் ராஜகோபாலனாக திருமால் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவாலயம் மற்றும் விண்ணகரம் இரண்டாலும் பெருமை பெற்று விளங்கும் தலங்கள் இவை.

அதேநேரம், வேறொரு பகுதியில் `அம்பிகையே தனக்கு மகவாக அவதரித்திட வேண்டும்’ என்று வேண்டியவராய் பரத முனிவர் யாகசாலை அமைத்து வழிபாடாற்றிக் கொண்டிருந்தார். அது, காவிரி ஆற்றின் இடைக்குறைப் பகுதி. எனவே `திருத்துருத்தி’ என்று அழைக்கப்பட்டது. உத்தாலக மரங்கள் நிறைந்து இருந்த வனம் ஆகையால் `உத்தாலக வனம்’ என்றும் வழங்கப்பட்டது.‌

குத்தாலம் ஆதிகேசவபெருமாள் கோயில்

காலம் சுழன்றது. திருவாவடுதுறையில் சாப விமோசனம் பெற்ற அம்பிகை, பரத முனிவரின் வேள்வித் தீயிலிருந்து பெண் குழந்தையாக அவதரித்தாள். முனிவரால் வளர்க்கப்பட்ட அவள், உத்தாலக வன நாதரை தினமும் வழிபட்டு கன்னிகையாக வளர்ந்தாள். காலம் கனிந்ததும் சிவபெருமான் அவளை மணம் புரிந்தார். இந்தத் தெய்வத் திருமணத்தை உலகம் வியக்க நடத்திவைக்கும் பொருட்டே பெருமாள் இங்கே ஆதிகேசவப் பெருமாளாக இந்தத் தலத்தில் எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

கல்யாணத் திருச்சடங்குகளும் தலங்களும்

இந்தத் திருமணம் சாதாரணத் திருமணம் அல்ல. உலகில் திருமணச் சடங்குகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை உணர்த்திய முதல் தெய்விகத் திருமணம் என்று தலபுராணம் போற்றுகிறது. குறிப்பிட்டச் சடங்குகள் நிகழ்ந்த இடங்கள், தனித்தனி ஊர்களாக அருகருகே அமைந்துள்ளன.‌

இவ்விதமாக 43 வகையான திருக்கல்யாண சம்பிரதாயங்களை முறையே... மங்கலவேள்வி செய்த தலம் - திருவேள்விக்குடி, சிவபெருமானை எதிர்கொண்டழைத்தது - திரு எதிர்கொள் பாடி, திருமாங்கல்யம் செய்வித்தது - திருமங்கலம், தமது திருக்கரங்களினால் புனித நீர் வார்த்து சகோதரியான அமிர்தமுகிழாம்பி கையை உத்தவேதீஸ்வரப் பெருமானுக்கு விவாகம் செய்தளித்தது - திருமணஞ்சேரி, முளைப்பாலிகை விடுத்தது - குணதலைப்பாடி... என குறிப்பிட்ட தலங்களில் உரிய சடங்குகளை நிகழ்த்தி மகிழ்ந்துள்ளார் இந்த பெருமாள். இவ்வாறு இன்று நாம் பின்பற்றும் பல திருமணச் சம்பிரதாயங் களின் புராண அடித்தளமாக இவ்வூரும் சுற்றுவட்டாரத் தலங்களும் திகழ்கின்றன.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருமண வைபவத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த மகிழ்ச்சியில், செங்கமலவல்லித் தாயாருடன் கல்யாணக் கோலத்தில் இத்தலத்திலேயே நிலைத்தருள்கிறார் ஆதிகேசவப் பெருமாள்.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவர் விக்கிரஹம் - மிகவும் பழைமையான சுயம்புத் திருமேனி என்று கூறப்படுகிறது. முன்புறத்தில் உற்சவத் திருமேனிகள் அலங்கார மூர்த்தங்களாக இருத்தப் பெற்றுள்ளன.‌ எப்பொழுதும் சர்வாலங்கார ரூபராக இவரைத் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.‌

திருமணத் தடை நீங்க வேண்டி வரும் பக்தர்கள், நெய்தீபம் ஏற்றி இந்தப் பெருமாளை வழிபட்டு மனமாரப் பிரார்த்திக்கின்றனர். ஏராளமானோர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் மீண்டும் வந்து நன்றிக்கடன் செலுத்தும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

குறிப்பாக... மேலே குறிப்பிட்டுள்ளபடி அருள்மிகு அமிர்த முகிழாம்பிகையை சமேத உத்தவேதீஸ்வரப் பெருமான் கோயிலில் கல்யாணப் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள், இந்தப் பெருமாள் கோயிலுக்கும் வந்து வணங்கினால்தான் பலன் முழுமை அடையும் என்பது சம்பிரதாயம்.

குத்தாலம் ஆதிகேசவபெருமாள் கோயில்

அழகும் அமைதியுமாய் தெய்வச்சாந்நித் தியத்துடன் திகழ்கிறது இந்தக் கோயில். அர்த்த மண்டபத்தில் ஆழ்வாராதிகள் காட்சி தருகின்றனர்.‌ மண்டபத்தின் இருபுறமும் தசாவதார ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அழகிய சிறு பிராகாரம் ஒன்று கருவறையை ஒட்டினாற் போன்று அமைந்துள்ளது. அதனை அடுத்து விஸ்தாரமான சுற்றாலை அமைந்திருக்கிறது. மகாமண்டபத்தின் வலது புறத்தில் சக்கரத்தாழ்வார் தரிசனம். தொடர்ந்த மந்திர ஜபங்களின் விளைவாக அதீத அதிர்வுகளுடன்‌ விளங்குகிறது இந்தச் சந்நிதி.‌

அம்பிகையுடன் பசு ரூபம் தாங்கி உடன் வந்த திருமகள், தானும்‌ சுயவுருவம் பெற்றதும் தாமரைமலர் ஒன்றில் குழந்தையாக இந்தத் தலத்தில் தோன்றி அருளினாள் என்கிறது தலபுராணம். இதனாலேயே இத்தலத்துத் தாயாருக்கு `பங்கஜவல்லி என்கிற செங்கமலநாச்சியார்’ என்பது திருநாமம்.

மூலஸ்தானத்திற்கு வலது பாகத்தில் தனித்த சந்நிதியில் பூரண சௌந்தர்யத்துடன் எழுந்தருளியிருக்கிறார் செங்கமலவல்லித் தாயார். இந்தத் தாயாரை வேண்டிக் கொண்டால் மங்கல காரியங் களில் தடைகள் ஏற்படாது; வீட்டில் செல்வச் செழிப்புக்குக் குறையே இருக்காது என்கிறார்கள். இடப்புறத்தில் தனிச்சந்நிதியில் அருளும் குழந்தை வடிவ அனுமனும் சிறந்த வரப்பிரசாதியாம்!

சிவபெருமானுக்கு உரிய மகாவில்வம் இப்பெருமாளுக்கு உரிய புனித விருட்சமாக இங்கு போற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தனித்த மேடையில் பாதுகாக்கப்படும்‌ இந்த மரத்தினை வலம் செய்து பூஜிப்பது சிறப்பு என்கிறார்கள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

ஆதிசங்கரர் பேரவை என்கிற அமைப்பின் மூலமாக ஒன்று சேர்ந்த அன்பர்களின் பெருமுயற்சியால், ‌இந்த ஆலயம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது. தற்போது பெருமாளுக்குரிய அனைத்து விசேஷங்களும் மிக அருமையாக நிகழ்ந்தேறி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல வருடங்களுக்குப் பிறகு, முதன் முறையாக இந்த வருடம் முதல் பிரும்மோற்சவ நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த அற்புதத் திருத்தலத்தில்தான் சக்திவிகடனும் ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் ஆதிசங்கரர் பேரவையும் இணைந்து திருவிளக்குபூஜை நடத்த உள்ளனர். இந்த நிகழ்வை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், தீபம் விளக்கேற்றும் எண்ணெய், சக்தி மசாலா ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

திருவிளக்குபூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User