IT கம்பெனியில் பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்த 6 பேர் சிக்கியது எப்படி?

Apr 9, 2026 - 09:31
 0
IT கம்பெனியில் பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்த 6 பேர் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக அணித் தலைவர்களாக இருக்கும் ஆண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தனர். சில ஆண் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துள்ளனர்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருந்தனர். ஆனால் அக்கம்பெனியில் பணிபுரியும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி இது குறித்து இமெயில் மூலம் போலீஸாருக்குப் புகார் கொடுத்தார்.

கைது
கைது

அதன் அடிப்படையில் போலீஸார் ஐ.டி. கம்பெனியில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைத்தனர். அவர்கள் ஒவ்வொரு பெண் ஊழியரையும் தனித்தனியாக விசாரித்தனர். அதன் அடிப்படையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஓர் ஆண் ஊழியரும் புகார் கொடுத்து இருந்தார். அவர் தனது மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அணித் தலைவர் செயல்படுவதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு பெண் ஊழியரிடம் அவரது திருமணமான அணித் தலைவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அடிக்கடி அப்பெண்ணை வெளியில் அழைத்து சென்று இது போன்று செய்துள்ளார். அதோடு அந்த நபர் அதே அலுவலகத்தில் பணிபுரியும் தனது நண்பரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அவரது நண்பரும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அவரது உறவுகள் குறித்து தனக்கு தெரியும் என்று கூறி பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தார். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நகரத்தில் எந்தவொரு நிறுவனத்திலும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், அச்சமின்றி காவல்துறையை அணுக வேண்டும். குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய துணை போலீஸ் கமிஷனர் மிட்கே இது குறித்து கூறுகையில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்த பெண், மற்ற பெண் ஊழியர்களும் பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களையும், அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களையும் எதிர்கொள்வதாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு, தங்கள் புகார்களைப் பதிவு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0