சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

Jun 06, 2026 - 16:31
0
சுட்டெரிக்கும் வெயில்... தீர்ந்த குடிநீர்: சஹாரா பாலைவனத்தில் 49 உயிர்களைக் குடித்த லாரி ரிப்பேர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில், பயணம் செய்த லாரி பழுதடைந்ததால் குடிக்கத் தண்ணீரின்றி தாகத்தால் தவித்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாலி நாட்டின் 'தல்ஹான்டெக்' என்ற நகரில் இருந்து நைஜர் நாட்டை நோக்கி மக்கள் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. நைஜர் எல்லையான அசமகா (Assamaka) பகுதிக்கு மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் நடுவே வந்தபோது, அந்த லாரி திடீரென பழுதடைந்து நின்றது. ஓட்டுநர், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து வாகனத்தைப் பழுதுபார்க்க தீவிரமாக முயன்றனர்.

பாலைவன வெப்பம்
பாலைவன வெப்பம்

ஆனால், கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் லாரியைச் சரிசெய்ய முடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலில், குடிநீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாத பேராபத்தான சூழலில் அவர்கள் பாலைவனத்தின் நடுவே மாட்டிக்கொண்டனர். நாட்கணக்கில் தண்ணீர் கிடைக்காமல் போனதால் உடல் வறட்சி ஏற்பட்டது. தாகத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல், லாரியின் அடியிலும் அதைச் சுற்றிலும் ஒருவர் பின் ஒருவராகச் சுருண்டு விழுந்து 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கொடூரமான சூழலில் இருந்து இரண்டு பேர் மட்டும் எப்படியோ தப்பினர். அவர்கள் இருவரும் உயிரைப் பணயம் வைத்து, சுட்டெரிக்கும் மணலில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று ஒரு நீர்நிலையைக் கண்டறிந்தனர். நீர்நிலையைக் கடந்த அவர்கள், அசமகா பகுதிக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அகாதெஸ் பிராந்திய ஆளுநர் ஜெனரல் இப்ரா பௌலாமா இசா, உடனடியாக மீட்புக் குழுவினரை அனுப்பி வைத்தார்.

பாலைவன வெப்பம்
பாலைவன வெப்பம்

சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர், சிதறிக் கிடந்த 49 பேரின் உடல்களையும் மீட்டு, அந்தப் பாலைவனப் பகுதியிலேயே பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்தனர். பசி, தாகம் மற்றும் கடுமையான வெப்பம் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடும் அகதிகளும், புலம்பெயர்வோரும் பயன்படுத்தும் முக்கியப் பாதையாக இந்தச் சஹாரா பாலைவனப் பகுதி உள்ளது. போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், கடுமையான வெப்பநிலை காரணமாகவும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் பாலைவன மணலில் தாகத்தாலும் பசியாலும் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User