சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

Mar 5, 2026 - 13:32
 0
சேலம்: "தாழ்த்தப்பட்ட உன்னைத் திருமணம் செய்ய முடியாது" - காதலனின் சாதி ஆணவத்தால் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் கார்த்திகேயன். மாற்று சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன், சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு தமிழ் இலக்கியம் பயின்று வந்த 19 வயதுடைய மாணவி ஒருவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்திருக்கிறான். (பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்ணின் பெயர், வாழிடம் போன்ற அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளது)

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

மாணவியின் வீட்டில் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் எழுந்த நிலையில், கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் காதலன் கார்த்திகேயனிடம் கேட்டிருக்கிறார்.

சற்றும் எதிர்பாராத வகையில், "தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது" எனச் சாதி ஆணவத்தில் பேசியிருக்கிறான் கார்த்திகேயன்.

அவமானத்தால் மனமுடைந்த மாணவி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொடூரம் குறித்து தெரிவித்த மாணவியின் உறவினர்கள், "காதலிக்கிறேன் என்ற பெயரில் இந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்த கார்த்திகேயன், சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுத்ததுடன் நண்பர்கள் மூலம் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி
தற்கொலை செய்து கொண்ட மாணவி

சாதிய அவமானத்தால் மனமுடைந்த அவள், இந்த முடிவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் மகளுக்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும்" எனப் போராடி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், "இறப்பதற்கு முன்பாக அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகேயனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0