`அன்று எதிர்ப்பு… இன்று அனுமதி!' அணுக்கனிம சுரங்கத் திட்டத்தில் தவெகவின் இரட்டை நிலைப்பாடு

Jun 30, 2026 - 22:01
0
`அன்று எதிர்ப்பு… இன்று அனுமதி!'  அணுக்கனிம சுரங்கத் திட்டத்தில் தவெகவின் இரட்டை நிலைப்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இத்திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது இரட்டை நிலைப்பாடாக விமர்சிக்கப்படுகிறது.

மேலும் ஓராண்டுக்கு நில ஒதுக்கீடு நீட்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாக இருந்த நிலையில், அதன் காலக்கெடு முடிவடையும் கடைசி நாளிலேயே மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சுரங்கம்

இந்த நீட்டிப்பு காரணமாக, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனம் (IREL - Indian Rare Earths Limited), கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மீண்டும் அனுமதி கோரும் IREL

நில ஒதுக்கீட்டு ஆணை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான தனது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து அனுமதி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Coastal Zone Management Authority) IREL நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அணுக்கனிம சுரங்கத் திட்டம் மீண்டும் நிர்வாக ரீதியாக நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னர் கடும் எதிர்ப்பு

ஆனால், இதே அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அணுக்கனிம மணல் அகழ்வு மற்றும் சுரங்கத் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, இத்திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அரசியல் சர்ச்சையாக மாறுமா?

ஒருபுறம் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கட்சி, மறுபுறம் ஆட்சிக்கு வந்த பிறகு அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது

“அன்று எதிர்ப்பு, இன்று அனுமதி” என்ற விமர்சனத்தை முன்வைத்து நில ஒதுக்கீட்டு நீட்டிப்பு என்பது நிர்வாக ரீதியான நடவடிக்கையா அல்லது திட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் முடிவா என்பது குறித்து தமிழக அரசின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User