திருமணம் கடந்த உறவு; கண்டித்த மூதாட்டியைக் கொன்ற ஜோடி சிக்கியது எப்படி? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Nov 23, 2026 - 08:30
0
திருமணம் கடந்த உறவு; கண்டித்த மூதாட்டியைக் கொன்ற ஜோடி சிக்கியது எப்படி? கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

80 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், திருமணம் கடந்த உறவில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது
கைது

கிருஷ்ணகிரி அருகேயுள்ள மேல் அம்மனேரி கிராமத்தில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயதான முனியம்மாள், கடந்த 18 ஆம் தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தோடு மற்றும் வெள்ளிக்கொலுசு திருடப்பட்டதும் தெரிய வந்த நிலையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

உடற்கூராய்வு அறிக்கையில் மூதாட்டி முனியம்மாள் மூச்சுத்திணறி இறந்ததாகத் தெரியவர, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், அவர் வீட்டிற்கு அருகே வசித்து வந்த நாகம்மாள் என்ற பெண்மணி மீது சந்தேகம் ஏற்பட, அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தானும், குண்டா பெருமாள் என்பவரும் சேர்ந்து பெட்ஷீட்டால் முகத்தை அமுக்கி முனியம்மாளைக் கொலை செய்ததாகவும், பின்பு நகையைத் திருடியதாகவும் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த போலீசார், சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி நாகம்மாளையும், செம்படமுத்தூரைச் சேர்ந்த குண்டா பெருமாள் என்பவரையும் கைது செய்து திருடிய நகைகளை மீட்டனர்.

Murder (Representational Image)

போலீசாரிடம் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தில், "எங்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகத் திருமணம் கடந்த உறவு இருந்து வந்தது. நாங்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் சந்தித்துக்கொள்வதை மூதாட்டி முனியம்மாள் பார்த்துவிட்டார். அதனால் எங்களைத் திட்டிக் கொண்டிருந்தவர், இந்த விஷயத்தை ஊர்க்காரர்களிடம் சொல்லப்போகிறேன் என்று கூறி வந்தார்.

அதோடுதான் அவரைக் கொலை செய்ய திட்டமிட்ட நாங்கள் முனியாம்மாளின் வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தலையணை, பெட்ஷீட்டால் முகத்தை அமுக்கிக் கொலை செய்தோம். பின்பு அவருடைய தங்கத்தோடு, வெள்ளிக்கொலுசை எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டோம். யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தோம், இப்போது மாட்டிக்கொண்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User