தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

Jul 14, 2026 - 17:01
0
தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்;  விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் தனி செயல் திட்டத்தை உருவாக்கவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்

சென்னையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் இன்னும் அதிவிரைவு சாலைகள் போதுமான அளவில் உருவாக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, அதிவிரைவு சாலைகள் அமைப்பதற்கான விரிவான திட்டத்தை விரைந்து தயாரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெற்று வருவதால், அவற்றை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் தனி செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை அடையாளம் காணுதல், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சாலை

அதேபோல், நகர்புற வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுகால தொலைநோக்கு செயல்திட்டத்தையும் தயாரிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய குடியிருப்பு மற்றும் தொழில் மையங்களின் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சாலை வசதிகளை திட்டமிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெடுஞ்சாலைகள், நகர்ப்புற இணைப்புச் சாலைகள் மற்றும் அதிவிரைவு சாலை திட்டங்கள் மூலம் மாநிலத்தின் போக்குவரத்து திறனை மேம்படுத்தி, பயண நேரத்தைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User