`440 பேரை ஒரே இரவில் பரிசீலனை செய்தது எப்படி?' - உச்ச நீதிமன்றம் காட்டம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!

Jul 14, 2026 - 17:01
0
`440 பேரை ஒரே இரவில் பரிசீலனை செய்தது எப்படி?' - உச்ச நீதிமன்றம் காட்டம்; சிக்கலில் எஸ்.பி.வேலுமணி!

கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது உறுதி செய்துள்ளது.

பணி இழந்தவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஒரே இரவில் 440 பேரை எப்படிப் பரிசீலனை செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பி, மனுக்களை அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் விரிவான பின்னணியைக் காணலாம். 

எஸ்.பி.வேலுமணி

கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில் 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதியில் 54 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த நியமனங்கள் முறையான விளம்பரம் இன்றி, விதிமுறைகளை மீறி "புறவாசல் வழியாக" நடத்தப்பட்டவை என்று கூறி ஈஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

2021 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு, டிஎன்பிஎஸ்சி அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட தேர்வு அமைப்புகள் மூலம் இந்த நியமனங்கள் நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.

இந்த 54 நியமனங்களும் சட்டவிரோதமானவை என்று கூறி கடந்த ஜூன் 18-ம் தேதி அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதனால் வேலையை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்: 

"இளநிலை உதவியாளர்கள் பணிக்கு வந்த 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி? நீதிபதிகளாகிய எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் 65 வழக்குகளை முழுமையாகப் படிக்கப் போதிய நேரம் கிடைக்காத போது, 440 விண்ணப்பங்களை உங்களால் ஒரே இரவில் எப்படிப் பரிசீலனை செய்ய முடிந்தது?" என்று கேள்வி எழுப்பினர்.

விஜய் - வேலுமணி
விஜய் - வேலுமணி

"விண்ணப்பங்கள் கோருவதற்குப் பொது நாளிதழ்களில் விளம்பரம் தராமல், ஈ-பேப்பரில்  மட்டும் விளம்பரம் வெளியிட்டது ஏன்? எந்தத் தகுதியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? இவர்களது மதிப்பெண் பட்டியல் எங்கே?" என்று நீதிபதிகள் சாடினர். 

இந்த நியமனங்களில் அப்பட்டமான சட்டவிரோதமும், விதிமுறை மீறல்களும் இருப்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு:

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, "தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது இவர்களுக்குக் கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்த நீதிபதிகள், "முறைகேடாகப் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக உறுதி செய்தனர்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.

 காரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருங்குவதற்கான தருணத்தை பார்த்து வருகின்றார் என்கிற தகவல் வெளியாகி வருகிறது.

 எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் வரிசையில் எஸ்.பி வேலுமணியையும் தங்கள் பக்கம் கொண்டு வருவதில் முதல்வர் விஜய்க்கும் விருப்பம் இருக்கத்தான் செய்கின்றது.

 இந்த சூழலில் தான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இவர்களது இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்துள்ளது.

 முந்தைய திமுக அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு முறைகேடு வழக்குகளை தூசி தட்டி லஞ்ச ஒழிப்பு துறையின் மூலமாக விசாரணைக்கு உத்தரவிட்டு வரும் முதல்வர் விஜய், அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளையும் ஊழல் வழக்குகளையும் கவனிப்பாரா என்ற கேள்வி  தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் எஸ்.பி வேலுமணி தொடர்பான விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.

முதல்வர் விஜய் தொடர்ந்து மௌனம் சாதித்தாலோ,  அல்லது இவ்வளவு நடந்ததற்கு பிறகும் எஸ்.பி வேலுமணியை  தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டாலோ  எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குதிரை பேர  விமர்சனங்களுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்து விடும்.

 முதல்வர் விஜய் என்ன செய்யப் போகிறாரோ?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User