Parasakthi: 'ரூ.8.39 கோடி சம்பள பாக்கி' - தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சுதா கொங்கரா

Jun 30, 2026 - 16:01
0
Parasakthi: 'ரூ.8.39 கோடி சம்பள பாக்கி' - தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கரா, தான் இயக்கிய 'பராசக்தி' திரைப்படத்திற்கான சம்பளப் பாக்கித் தொகை ரூ. 8.39 கோடியை வழங்கக் கோரி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகியிருந்தது.

சுதா கொங்கரா
சுதா கொங்கரா

'பராசக்தி' திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் சுதா கொங்கராவுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, அவருக்கான மொத்தச் சம்பளம் ரூ.15 கோடி எனப் பேசப்பட்டிருக்கிறது. இதனுடன் ஜி.எஸ்.டி தனியாகச் சேர்க்கப்பட்டு, மொத்தத் தொகை ரூ.17.70 கோடி என முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின்படி, 'பராசக்தி' படம் தொடர்பான ஒட்டுமொத்த அறிவுசார் சொத்துரிமைகளையும் சுதா கொங்கரா தயாரிப்பு நிறுவனத்திற்கு முறைப்படி மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

'பராசக்தி' படமும் ஜனவரி மாதமே வெளியாகிவிட்டது. ஆனால், இதுவரை அவருக்கு ரூ.9.31 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மீதமுள்ள ரூ.8.39 கோடி தொகையைத் தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது 'டான் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'இதயம் முரளி' திரைப்படத்தை வரும் ஜூலை 10-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சம்பளப் பாக்கியைத் தராமல் தங்களது அடுத்த படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் பணிகளைத் தொடங்கியதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என சுதா கொங்கரா மனுவில் கோரியுள்ளார்.

பராசக்தி திரைப்படம்
பராசக்தி திரைப்படம்

மேலும், 'பராசக்தி' படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், 'இதயம் முரளி' படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்றும் சுதா கொங்கரா கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, "ஜூலை 8-ம் தேதி வரை 'பராசக்தி' திரைப்படத்தை தொலைக்காட்சிகளில் வெளியிடக் கூடாது" என உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஜூலை 7-ம் தேதிக்குள் தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User