Oh Butterfly Review: பெண்ணின் உளவியல் சிக்கல்களைப் பேசும் கதை; சுவாரஸ்யம் சேர்க்கிறதா?

Mar 6, 2026 - 14:00
 0
Oh Butterfly Review: பெண்ணின் உளவியல் சிக்கல்களைப் பேசும் கதை; சுவாரஸ்யம் சேர்க்கிறதா?

திருமணமான பிறகு முதல் முறையாக அர்ஜுனும் (அட்டுல்) கௌரியும் (நிவேதிதா சதீஷ்) கொடைக்கானலுக்குச் செல்கிறார்கள். திருமணமான மறுநாளே வேலை பறிபோனதால் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் அர்ஜுன்.

திருமணத்திற்கு முன்பு கௌரி, அர்ஜுனின் நண்பர் சூர்யாவை (சிபி சந்திரன்) காதலித்த விஷயத்தை அர்ஜுனிடம் தெரிவிக்க நினைக்கிறார். ஆனால், எந்தவொரு விஷயத்தையும் உணர்ச்சி மிக்கதாக அணுகும் அர்ஜுனிடம் இதனைத் தெரிவிக்க இயலாமல் கௌரி போராடுகிறார்.

Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்
Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்

இப்படியான வேளையில், எதேச்சையாக சூர்யாவைக் கொடைக்கானலில் சந்திக்கும் அர்ஜுன், அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு வரும் சூர்யாவால் பல மனப் போராட்டங்களை எதிர்கொள்கிறார் கௌரி.

இறுதியில், கௌரி - சூர்யா காதல் பற்றி அர்ஜுனுக்குத் தெரிய வந்ததா, அர்ஜுனுக்கும் கௌரிக்கும் என்னவாகிறது என்பனதான் அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்த 'ஓ பட்டர்ஃபிளை' படத்தின் கதை.

உண்மைகளை வெளிப்படுத்த முடியாமல் மனப் போராட்டங்களில் சிக்கித் தவிக்கையில் இறுக்கமான முகம், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவது, அனைத்திலிருந்து விடுதலைப் பெற்றுச் சிறகடிப்பது என அனைத்துக்கும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் நிவேதிதா சதீஷ்.

பணியிலிருந்து நீக்கப்பட்டதனால் ஏற்படும் மனச்சோர்வு, அனைத்தையும் உணர்ச்சிமிக்கதாகவே அணுகும் முறை எனப் பல வண்ணங்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்கு மிகை நடிப்பை மட்டுமே தந்திருக்கிறார் அட்டுல்.

ராயல் என்ஃபீல்டு, நீள முடி, ஆடைகள் எனக் கதாபாத்திரத்தின் ஸ்டைலை மட்டும் கூட்டும் சிபி சந்திரன், நடிப்பை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்திருப்பது ஏனோ!?

பட்டாம்பூச்சிகளைக் குழந்தைகளாகப் பாவித்து வளர்க்கும் நாசர், சோடா புட்டி கிழவியாக கீதா கைலாசம், இளம் வயதிலேயே ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்த சகோதரியாக லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோரை முன் நிறுத்த பளிச்சிடும் காட்சிகள் இல்லாததனால், 'ஹாய்' மட்டும் சொல்லிவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள்.

Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்
Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்

கொடைக்கானலின் பகல் - இரவு குளிரை ஒளியமைப்பில் உணரச் செய்த ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன், காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கும் ப்ரேம்களையும் அமைத்திருக்கிறார். காட்சிகளைக் கச்சிதமாகக் கூர்மைப்படுத்தாமல், புதிய திரைமொழி சேர்ப்பதாக இச்சிறிய கதையையும் படத்தொகுப்பாளர் புவனேஷ் மணிவண்ணன் இழு....த்துக் கொண்டே போயிருப்பது சோர்வை மட்டுமே தருகிறது.

இசையமைப்பாளர் வைசாக் சோம்நாத் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களில் கபில் கபிலன் பாடியிருக்கும் 'போகாதே' கீச்சொலியாகப் புத்துணர்ச்சி கொடுக்க, மற்ற பாடல்கள் சுமாரான வைப் மட்டுமே தருகின்றன. அவற்றில் சில, திரை நேரத்தை வம்படியாக ஆக்கிரமித்தும் கொள்கின்றன.

பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஆங்காங்கே மட்டுமே கரம் கொடுத்து உதவியிருக்கிறது. கிராபிக்ஸ் உதவியுடன் வண்ணத்துப்பூச்சிகளை நேர்த்தியாகக் கொண்டு வந்திருப்பதும் அழகு!

Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்
Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்

தன் பழைய காதலைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார் கௌரி. அதை திரைக்கதையில் புகுத்தி அழுத்தமிகுந்த படைப்பாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், அதில் கால்பங்கினை மட்டுமே வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் வாழ்க்கையோடு ஒப்பிடும் வண்ணத்துப்பூச்சி உவமை, கதையை முன்னகர்த்திக் கொண்டு செல்ல, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் விவரணைகள் ஆகியவை அழகு ஹைக்கூக்கள்! உணர்ச்சிகரமான நாயகன், நாயகியை அணுகும் விதம், இரு ஆண்களின் ஆட்டங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் பெண் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து கவனம் பெறுகிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஹரிஷ் ராஜகோபால் மற்றும் விஜய் ரங்கநாதன்.

Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்
Oh Butterfly Review |ஓ பட்டர்ப்ளை விமர்சனம்

ஆனால், மிகவும் குறுகிய கதையை, நீளத் திரைப்படமாக விரிக்கும் படலத்தில் சுவாரஸ்யமான 'மை' தீர்ந்துபோன உணர்வே! உளவியல் ரீதியாக அத்தனை அச்சத்திற்குள்ளும், குற்றவுணர்விற்குள்ளும் அடைபட்டிருக்கும் பெண்ணை சர்வ சாதாரணமாக 'இதைச் செய்தால் நீ சரியாகி விடுவாய்' எனச் சொல்வதெல்லாம் 'சந்திரமுகி' லாஜிக். அதனை மேம்போக்காகக் கடந்து சென்றிருப்பதும் சிக்கலே!

குறைகளைக் களைந்து, அடர்த்தியான வனத்திற்குள் இருக்கும் மரங்களைப் போலக் காட்சிகளைப் பின்னியிருந்தால் இந்த 'ஓ பட்டர்ஃபிளை' இன்னுமே சிறகை விரித்திருக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0