"அதிகாரிகள் பதவி விலக வேண்டும்!" - சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காகப் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான 'திரைவழி மதிப்பீட்டு முறையை' (OSM - On Screen Marking) அறிமுகப்படுத்தியது.
இந்த முறையின்படி, அனைத்து விடைத்தாள்களிலும் ஒரு ரகசியக் குறியீடு இடப்பட்டு, அவை தேர்வு மையங்களிலிருந்து மண்டல அலுவலகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, அந்தத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், பின்னர், மதிப்பீட்டாளர்கள் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து, CBSE பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவால் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர் எனக் கூறப்பட்டது.

இதன் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆசிரியர்களை ஈடுபடுத்தி, 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சொந்தமான 98 லட்சத்திற்கும் அதிகமான விடைத்தாள்கள் முதன்முறையாக மின்னணு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன.
இவற்றுள் சுமார் 13,000 விடைத்தாள்கள் வாசிக்க இயலாத நிலையில் இருந்ததால், அவை கையால் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் முடிவுகள் கடந்த மே 13 அன்று அறிவிக்கப்பட்டன.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அதில் பல மாணவர்களுக்குத் தாங்கள் எதிர்பாராத விதமாக நம்ப முடியாத அளவில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 88.39%-லிருந்து இந்த ஆண்டு 85.29% ஆகக் குறைந்தது.
அதனால் தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெற முயன்ற மாணவர்களுக்கு, மங்கலாக உள்ள விடைத்தாள்கள், விடுபட்ட பக்கங்கள் மற்றும் சிலருக்கு வேறொரு மாணவரின் விடைத்தாள்கள் கிடைத்துள்ளன.
இதனை அறிந்த பல மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முன்வரவே, அதனைத் தேர்வு வாரியம் சரிசெய்யும் விதமாக அதற்கான கட்டணத்தைக் குறைத்தது. திடீரென அந்தக் கட்டணம் செலுத்தும் அமைப்பும் செயலிழந்தது. சில முறை கூடுதல் தொகையும், வேறு சிலவற்றில் தேவைப்படுவதை விடக் குறைவான தொகையும் பிடித்தம் செய்யப்பட்டது.

இப்படி பல குழப்பங்களுக்கு நடுவே இது நம்ம மார்க்குதானா? என்ற கேள்வியோடு மார்க்ஷீட்டுகளை ஏந்திய மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிக் காத்திருக்கின்றனர்!
இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம், "இந்த பிளஸ் 2 மார்க் என்பது எல்லாக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. இந்த பிளஸ் 2 மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துத்தான் ஒரு மாணவரின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 75% மதிப்பெண் பெற முடியவில்லை எனில் ஐஐடி, என்ஐடி இரண்டிற்கும் செல்ல முடியாது.
இப்படியிருக்க சிபிஎஸ்சி திடீரென விடைத்தாள் திருத்துவதை ஆன்லைன் முறையில் OSM (On Screen Marking) மாற்றப் போகிறோம் என அறிவித்தார்கள்.
அதுவும் தேர்வின் சில நாட்கள் முன்பு. இதற்குக்காரணம் விடைத்தாள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டது.
ஆனால் இன்று பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்களை வெறும் 30 திருத்தும் மையங்கள் வைத்து எப்படிச் செய்ய முடியும்? இதில் முறையான திட்டமிடல் என்பது சுத்தமாக இல்லை. இது முறையற்றது மற்றும் ஆபத்தானது என்று முன்னதாகவே நான் விகடனில் தெரிவித்து இருந்தேன்.
எப்படி ஒரு மாணவரின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் வேறு ஒருவருடையதாகவோ, மங்கலாகவோ இருக்க முடியும்? அந்த வகையில் 98 லட்சம் மாணவர்களின் மதிப்பெண்கள் கேள்விக்குள்ளாகிறது. சரியான ஸ்கேன் செய்வதற்கான சிஸ்டமும், டெக்னாலஜியும் இல்லாமல் அவை எளிதில் ஹேக் செய்யப்படும் வகையிலும் இருப்பது ஒரு நடைமுறை ஒழுங்கின்மை.

ஆகவே கல்வி என்பது அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும். அரசியல் சார்ந்த தலைவர்கள் கல்வியில் ஒரு உயர்ந்த பதவியை வகிக்கும்போது அது மாணவர்களின் அடிப்படை வாழ்க்கையை பாதிக்கிறது. அது இந்த சிபிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு மட்டுமன்றி நீட் தேர்விலும் கூட.
நீட் தேர்வில் இந்த ஆண்டு மட்டும் என்றில்லாமல் பல ஆண்டுகளாக இளங்கலை, முதுகலை இரண்டிலும் பணம் முன்னிலைப்படுத்தப்பட்டுப் பல்வேறு முறைகேடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இந்தியா மாதிரியான பலதரப்பட்ட கலாச்சாரம், மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரே தேர்வு என்பதை எப்படி நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை. தென்னிந்தியாவில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆகவும் வட இந்தியாவில் முறைகேடுகள் நடக்க வழிவிடும்படியும் செய்கின்றனர்.
இதனால் தென்னிந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏஐ தலைத்தோங்கிய இந்தக் காலகட்டத்திலும் இன்னும் மும்மொழிக் கொள்கைக்கான சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஆகையால் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் இந்த சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடியில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நாட்டின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கப்பாற்பட்டு, இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உணர்ந்து "உடனடியாக பதவி விலக வேண்டும்".
அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை. மாணவர்களின் வாழ்க்கையில் பந்தாடியுள்ளனர். இது நாடே வெட்கப்படக்கூடிய வருந்தத்தக்க செயல். இந்தியா மாதிரியான மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களுக்குச் சிறந்த முறையில் வழங்க வேண்டும். தயவு செய்து கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம், எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுங்கள்.

இதன்மூலம் JEE மெயின்ஸ், அட்வான்ஸ்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, பிளஸ் டூவில் மதிப்பெண் குறைவாகப் பெறுவதால் வாய்ப்பை இழக்கின்றனர். இது இந்த புதிய OSM முறையின் தவறு, மாணவர்களின் தவறில்லை. அதனால் அந்த மாணவரால் ஐஐடிக்கு போக முடியாமல் போகிறது.
எனவே இதற்கு ஒரே வழி, ஏற்கனவே விடைத்தாள்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கும், அதனை முறையாக எடுத்து அந்தந்த மாணவர்களிடம் அது அவர்களுடையதா என உறுதி செய்து மீண்டும் திருத்த வேண்டும்.
ஆனால் அதனை எடுத்துச் சரிசெய்வது முடியாத காரியம். அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும், இல்லையேல் இந்தத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். இந்தக் குளறுபடி, JEE கலந்தாய்வு, நீட் மறுதேர்வு என மாணவர்களுக்குப் பலவகையில் இடையூறாக இருக்கும், அதனையும் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)