Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

Mar 18, 2026 - 20:01
 0
Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் பணிகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசின் சட்ட அமைச்சகம் 'நோட்டரி போர்டல்' (Notary Portal) என்ற புதிய டிஜிட்டல் தளத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நோட்டரி வழக்கறிஞர் என்பவர் யார்?

மத்திய அல்லது மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரே 'நோட்டரி' (Notary Public) எனப்படுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக (பெண்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு 7 ஆண்டுகள்) வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள்.

Advocate
Advocate

ஒரு ஆவணம் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்துவதும், அதில் கையெழுத்திட்ட நபர் அவர்தானா என்பதைச் சட்டப்பூர்வமாகச் சான்றளிப்பதும் இவர்களின் முதன்மைப் பணியாகும்.

சொத்து ஒப்பந்தங்கள், கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை, பெயர் மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றிற்கு நோட்டரி கையெழுத்து கட்டாயமாகும்.

நோட்டரி போர்டல்

எனவே, சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தால் இந்த 'நோட்டரி போர்டல்' (Notary Portal) அதிகாரப்பூர்வமாக 2024, ஏப்ரல் 26 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. காகிதமில்லா நிர்வாகத்தை (Paperless Administration) ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டம், இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

2026-ம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து மாநிலங்களில் உள்ள நோட்டரிகளும் இந்த மத்திய போர்டலில் தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Notary Portal
Notary Portal

தற்போது என்ன சிக்கல்?

2018-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இந்த நோட்டரியில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த 10,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதிலிருந்து நேர்காணலுக்கென 3,612 வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய ஆவணங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக மறுவிண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கென இருக்கும் நோட்டரி போர்டல் இணையப் பக்கத்தில் மூன்று முக்கிய சிக்கல்களை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்கின்றனர்.

1. விண்ணப்பதாரரின் மாநிலம் தேர்வு பகுதியில், மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் பெயரும் விடுபட்டிருக்கிறது.

12 மாநிலங்களும் பெரும்பாலும் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். எனவே, பட்டியலில் மாநிலங்கள் விடுபட்டிருப்பது தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பா என்ற கேள்வி எழுகிறது.

அதேநேரம், தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மாவட்டங்களின் பெயர் பட்டியல் இடம்பெறுகிறது. அதை வைத்து விண்ணப்பத்தைத் தொடர்ந்தால் அடுத்த சிக்கலாக இந்தி வருகிறது.

Notary Portal
Notary Portal

2. `தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், நோட்டரி போர்ட்டலில் பதிவு செய்யவும் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்' - என்ற வழிகாட்டுதலின் எண் (Step-7) -ல், தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், தங்களின் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவற்றை இந்தி மொழியிலும் உள்ளீடு செய்ய வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கும் வசதி நோட்டரி போர்ட்டலிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியில் நீங்கள் உள்ளீடு செய்யும் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவை ஏற்கனவே நீங்கள் 'சர்வீஸ் பிளஸ்' (Service Plus) அல்லது நோட்டரி ஆன்லைன் போர்ட்டலில் ஆங்கிலத்தில் கொடுத்த விவரங்களுடன் சரியாக ஒத்துப்போக வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் (Mis-match) இருந்தால், உங்கள் விண்ணப்பம் குறைபாடுள்ள ஒன்றாகக் கருதப்படும்.

நீங்கள் வழங்கும் இந்த விவரங்கள் தானாகவே கணினியால் எடுக்கப்பட்டு, உங்கள் 'தொழில்முறை சான்றிதழில்' (Certificate of Practice) அச்சிடப்படும். எனவே, இரண்டு மொழிகளிலும் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Notary Portal
Notary Portal

இந்தப் போர்ட்டலில் இந்தி பேசும் மாநிலம் அல்லாத ஒருவர் பதிவு செய்கிறார் என்றால், அவர் தன் பெயர் முதல் முகவரி வரை கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் இந்தி மொழி தெரிந்தவரின் உதவி தேவைப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.

3. மாநிலத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்பதால், மற்ற தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்பித்தாலும், மாநிலம் தேர்வு செய்யவில்லை என்பதால் விண்ணப்பத்தைச் சமர்பிக்க முடியவில்லை.

சுமார் 3600-க்கும் மேற்பட்ட, நோட்டரிக்காகப் பதிவு செய்த வழக்கறிஞர்கள் இந்தச் சிக்கல்களால் சிரமப்படுவதாகத் தெரியவருகிறது.

எனவே, விண்ணப்பதாரர்களின் காலக்கெடு முடிவதற்குள் இந்தக் கோளாறுகளைச் சரிசெய்து, தென்மாநில வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை உறுதி செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முன்வருமா?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0