ஆதரவற்றவர் என்று யாரும் இல்லை: 100+ பெண் குழந்தைகளுக்குத் தாயான ‘அன்னை’ பிரகாஷ் கவுர் கதை!

Jun 22, 2026 - 10:01
0
ஆதரவற்றவர் என்று யாரும் இல்லை: 100+ பெண் குழந்தைகளுக்குத் தாயான ‘அன்னை’ பிரகாஷ் கவுர் கதை!

"வாழ்க்கை என்பது நாம் என்ன பெற்றுக்கொண்டோம் என்பதில் இல்லை, மற்றவர்களுக்கு நாம் என்ன கொடுத்தோம் என்பதில் தான் அடங்கியிருக்கிறது." இந்த வரிகளுக்குச் சாட்சியாகத் திகழ்பவர் பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த பிரகாஷ் கவுர் (Prakash Kaur). ஆதரவற்றவராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் ஒரு மாபெரும் சக்தியாக உயர்ந்தார். வலிகளையும், வறுமையையும், சமூகத்தின் புறக்கணிப்பையும் உரமாகக் கொண்டு, அன்பை மட்டுமே அறுவடை செய்த பிரகாஷ் கவுரின் நெஞ்சைத் தொடும் இந்த வாழ்க்கை, உத்வேகத்தை வழங்கும். இது வெறும் கதை அல்ல; கண்ணீரில் எழுதப்பட்டு, அன்பால் செதுக்கப்பட்ட ஒரு சரித்திரம்.

பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home
பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home

அது சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முந்தைய பஞ்சாப். ஒரு பெண் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, ஈவு இரக்கமின்றி வீதியில் வீசப்பட்டது. அந்தக் குழந்தைக்குத் தனது பெற்றோர் யார் என்றோ, பிறந்த தேதி என்ன என்றோ தெரியாது. வீதியில் கிடந்த அந்தக் குழந்தை மீட்கப்பட்டு, ஜலந்தரில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லமான 'நாரி நிகேதன்' (Nari Niketan) கொண்டு செல்லப்பட்டது. அங்குதான் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு 'பிரகாஷ் கவுர்' என்று பெயரிடப்பட்டது.

தாய், தந்தை, சொந்தம், பந்தம் என எந்த உறவும் இல்லாமல், தனிமையின் வலியோடும் ஏக்கத்தோடும் வளர்ந்தார் பிரகாஷ். "அம்மா" என்று அழைக்க நாதியற்ற நிலையில் அவர் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், அந்த வலி அவரை முடக்கிவிடவில்லை; மாறாக, ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டது.

வலியிலிருந்து பிறந்த வைராக்கியம்

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, அடிப்படை கல்வியைக் கற்ற பிரகாஷ் கவுரின் மனதில் ஒரு நெருப்பு எரியத் தொடங்கியது. "நான் அனுபவித்த ஆதவற்றவர் என்ற வலியையும், தனிமையையும் இனி இந்த உலகில் எந்த ஒரு பெண் குழந்தையும் அனுபவிக்கக் கூடாது" என்று அவர் உறுதியாக முடிவெடுத்தார்.

அந்த வைராக்கியத்தின் விளைவாக, 1993-ம் ஆண்டு ஜலந்தரில் பாய் கனையா ஜி அறக்கட்டளையின் (Bhai Ghanayya Ji Charitable Trust) கீழ், 'யுனிக் ஹோம்' (Unique Home) என்ற இல்லத்தை அவர் தொடங்கினார். இது சாதாரண ஆதரவற்றோர் இல்லம் அல்ல; தெருவில் வீசப்படும் பெண் குழந்தைகளுக்கான ஒரு சொர்க்கம்.

பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home
பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home

பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகளைத் தூக்கி எறியும் கொடூரம் பஞ்சாபில் அதிகம் காணப்பட்ட காலகட்டம் அது. சாக்கடைகளிலும், முள் செடிகளிலும், குப்பைத் தொட்டிகளிலும், நாய்கள் கடித்துக்குதறும் நிலையிலும் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தைகளை பிரகாஷ் கவுர் மீட்டெடுத்தார். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வெறும் உணவும் தங்குமிடமும் மட்டும் அவர் வழங்கவில்லை. அந்த நகரின் மிகச் சிறந்த ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

தொடக்கத்தில், பிரகாஷ் கவுர் அவர்கள் தன்னிடம் இருந்த மிகச் சொற்பமான வருமானத்தையே இந்த இல்லத்திற்காகச் செலவிட்டார். ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிய வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சேமித்த பணத்தை, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தினார். இவரின் உன்னதமான பணியைக் கண்ட உள்ளூர் மக்கள், ஆரம்பத்திலிருந்தே இவருக்குப் பெரும் ஆதரவு அளித்து வந்தனர்.

பிரகாஷ் கவுரின் சாதனை ஊடகங்கள் வாயிலாக உலகிற்குத் தெரிந்த பிறகு, பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (CSR - Corporate Social Responsibility) திட்டங்களின் மூலமும், கல்வி மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி கிடைக்கத் தொடங்கியது. இதுவே குழந்தைகளைச் சிறந்த பள்ளிகளில் படிக்க வைப்பதற்கும், அவர்களின் உயர்கல்விக்கும் பேருதவியாக அமைந்தது.

இன்று அவருடைய அரவணைப்பில் வளர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home
பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home

'யுனிக் ஹோம்' என்ற பெயருக்கு ஏற்ப, அந்த வீட்டின் அமைப்பும் தனித்துவமானது. அங்கு வளரும் எந்தக் குழந்தைக்கும் தன் சாதி என்ன, மதம் என்ன என்பது தெரியாது. அனைவருக்கும் 'கவுர்' (Kaur - இளவரசி என்று பொருள்) என்ற ஒரே குடும்பப் பெயர்தான்.

பிரகாஷ் கவுர் அவர்களை 'ஆதரவற்றவர்கள்' என்று ஒருபோதும் அழைப்பதில்லை. அவர்கள் அனைவரும் அவருடைய சொந்த மகள்கள். அங்குள்ள குழந்தைகள் பிரகாஷ் கவுரை "அம்மா" என்றே அன்பொழுக அழைக்கின்றனர். பிறந்த தேதியே தெரியாத இந்தக் குழந்தைகளுக்காக, ஏப்ரல் 24-ஆம் தேதியை அனைவருக்குமான பொதுவான பிறந்தநாளாகத் தேர்ந்தெடுத்து, பிரமாண்டமான கேக் வெட்டி, புத்தாடைகள் அணிவித்து ஒட்டுமொத்த குடும்பமாக அதைக் கொண்டாடுகிறார்கள்.

விருதுகளும் அங்கீகாரமும்

தன்னலம் கருதாத இந்த மாபெரும் சேவைக்காக, இந்திய அரசு, பல்வேறு அமைப்புகள் பிரகாஷ் கவுரை அங்கீகரித்துள்ளன. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அதிகாரமளித்தலுக்காகவும் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான 'நாரி சக்தி புரஸ்கார்' (பெண் சக்தி விருது) இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"எனக்குப் பெற்றோர் யார் என்று தெரியாது, ஆனால் இன்று நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு நான் தாயாக இருக்கிறேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார் பிரகாஷ் கவுர்.

பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home
பிரகாஷ் கவுர் prakash kaur Unique Home

நம்முடைய பிறப்பு எப்படி அமைந்தது, நாம் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது நமது வெற்றியையோ எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில்லை. நாம் எந்த வலியை அனுபவித்தோமோ, அதே வலியை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கும் அந்த உயர்ந்த எண்ணம்தான் ஒரு மனிதனைச் சரித்திரமாக மாற்றுகிறது.

ஒரு காரியம் உண்மையான அன்போடும், நேர்மையோடும் தொடங்கப்பட்டால், அதற்கான வழிகளையும் வளங்களையும் காலம் தானாகவே உருவாக்கிக் கொடுக்கும். ஒவ்வொரு நாள் காலையையும் இந்தச் சிந்தனையோடு தொடங்குவோம்; நமக்கான பாதையை நாம் உருவாக்குவோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User