நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு - திக் திக்
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 - ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்திருக்கிறார். கூடலூர் அருகில் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார். 
இந்த நிலையில், ஊசி மலை பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாகவும், உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதால் எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தங்கும் விடுதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். செல்போனில் தன்னுடைய லொக்கேஷனையும் அனுப்பியிருக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்டு பதறிய தங்கும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். நிகழ்விடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு அந்த இளைஞரைக் கண்டறிந்துள்ளனர். முதுகு தண்டுவடம் பகுதியில் கடுமையான காயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். 
அவரை மீட்டு மேலே கொண்டு வருவதில் சிரமம் இருப்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் ராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளனர். குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ராணுவ வீரர்கள் குழுவாகச் சென்று மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இளைஞர் விழுந்து கிடந்த இடத்திலியே வைத்து விடிய விடிய சிகிச்சை அளித்துள்ளனர்.
இன்று அதிகாலை அந்த இளைஞரை மீட்டு ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை தொடர்ந்து 15 மணி நேரமாக போராடி ராணுவ உதவியுடன் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்ட நிகழ்வு மக்களிடையே பாராட்டுதலைப் பெற்று வருகிறது. 
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, " பள்ளத்தில் விழுந்து கிடந்த இளைஞரை கண்டறிவது எளிமையாக இருந்தது. அவர் சுய நினைவுடன் இருந்தாலும் தண்டுவட காயம் காரணமாக நகர முடியாமல் இருந்தார். அவரை மீட்பதற்கு சிறப்பு உதவி தேவைப்பட்டது. இதன் காரணமாகவே ராணுவ உதவி தேவைப்பட்டது. அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0