`தமிழகத்தில் மின்தடைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் உடனடி அமல்' - ‘RTEP’ என்றால் என்ன?

Jul 08, 2026 - 12:01
0
`தமிழகத்தில் மின்தடைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் உடனடி அமல்' - ‘RTEP’ என்றால் என்ன?

தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடை (Repeat Tripping) பிரச்னைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் “Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `தமிழ்நாடு தற்போது 3.5 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோருக்கு சேவை வழங்கி வருவதாகவும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான துணை மின் நிலையங்கள், உயர் மின்னழுத்த மற்றும் தாழ் மின்னழுத்த மின் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம்

மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீராக இருந்தாலும், சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள், மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை தற்காலிகமாக சரிசெய்வதை விட, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே RTEP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மின்தடையின் அடிக்கடி நிகழ்தல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, சேவை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு மின்தடை சம்பவத்திற்கும் ‘Root Cause Analysis’ எனப்படும் அறிவியல் அடிப்படையிலான காரண ஆய்வு மேற்கொள்ளப்படும். மின் மாற்றி கோளாறு, கேபிள் பழுது, பாதுகாப்பு அமைப்பு செயலிழப்பு, அதிக சுமை, விலங்குகள் அல்லது பறவைகள் காரணமான கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

திட்டத்தை கண்காணிக்க தலைமையகத்தில் மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) அணி இணைந்து மாநிலம் முழுவதும் நிகழும் மின்தடை சம்பவங்களை ஆய்வு செய்து, சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளை பரிந்துரைக்கும்.

மின்சாரம்

புதிய துணை மின் நிலையங்கள், கூடுதல் மின் பாதைகள், திறன் மேம்பாடு, நெட்வொர்க் தானியக்கம் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள் குறைவதோடு, மின்விநியோக நம்பகத்தன்மை உயர்ந்து, நுகர்வோருக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User