புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் அரசு இறங்கியது.
இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தை சுற்றியுள்ள 12 மீனவ கிராம மக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மீனவ கிராமத்தினர் போராட்டத்திலும் இறங்கினர். மேலும், குறிப்பிட்ட அந்த இடம் மீனவர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கான இடமென்றும் அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு அரசு சார்பில் கிராமத்துக்கு ஒருவரை மட்டும் அழைத்ததாகவும், அழைப்பையும் கடிதம் வாயிலாக தெரிவிக்காமல் அலைபேசியில் அழைத்ததாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினார். கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு முறையாக அழைக்காமல் ரகசியமாக கூட்டத்தை நடத்தி முடிக்க நினைக்காமல், முறையாக கூட்டத்துக்கு அழைப்பு விடுங்கள் அப்போதுதான் கூட்டத்துக்கு வருவோம் என மீனவ சங்கத்தினர் அரசுக்கு கடிதம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முறையான அழைப்போடு நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் மீனவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது வரைக்கும் கலெக்டர் அலுவலகம் தரப்பில் மீனவர்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
கலெக்டர் அலுவலகத்தை தொடர்புகொண்ட மீனவர்களிடம் 'அப்புறமா சொல்றோம்' என்று மட்டும் தகவல் சொல்லியிருக்கின்றனர். இந்த பதில் மீனவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 'முறையாக அழைப்பு விடுத்தால் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசு எங்களிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. அறிவித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்கிறது.
அலைக்கழித்து காலம் தாழ்த்தியெல்லாம் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிவிட முடியாது. புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக நாங்கள் உறுதியாக ஒற்றுமையாக இருக்கிறோம்' என்கின்றனர் மீனவர்கள். கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறையாக நடத்தத் திட்டமிடாமல் தள்ளிப்போட்டு ரத்து செய்ததை கண்டித்தும், பட்டினப்பாக்கத்தில் ஏன் தலைமைச் செயலகம் அமையக்கூடாது என்பதைப் பற்றியும் மீனவ சங்கத்தினர் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கவிருக்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)