நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' - இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

Aug 30, 2026 - 10:31
0
நேபாள வெள்ளம்: 'இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை' - இந்தியாவின் அடுத்தக்கட்ட உதவி என்ன?

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26), உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளம் பனிப்பாறை விழுந்து சரிந்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 4 நாள்களைக் கடந்தும், நேபாளத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றின் லேட்டஸ்ட் அப்டேட்...

நேபாள அரசின் தற்போதைய தகவலின்படி, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் இதுவரை 682 உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 3,000 பேரை இன்னும் காணவில்லை. இதில் 275 இந்தியர்கள் அடக்கம். நேற்று நேபாளத்திற்கு உதவ இந்தியா நான்காவது விமானத்தை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...

“இந்தியாவிலிருந்து 11 டன் நிவாரணப் பொருட்களுடன் 4-வது விமானம் தற்போது புறப்பட்டுவிட்டது. இந்திய வான்படைக்குச் சொந்தமான C-130 விமானத்தில் பின்வரும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன:

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான கருவிகளுடன் கூடிய சுரங்கப் பாதை தொழில்நுட்பக் குழு (Tunnel technical contingent).

டி.என்.ஏ (DNA) பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு.

கம்பளிகள், தூங்குவதற்கான பைகள் (sleeping bags), தார்பாய், பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் சுகாதாரக் கருவிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள்.

இதுதவிர, 230 அடி நீளமுள்ள ஒற்றை வழி மாடுலர் ஸ்டீல் பாலம் அமைப்பதற்கான உபகரணங்களைச் சுமந்து சென்ற 16 லாரிகள் நேபாளத்தைச் சென்றடைந்துள்ளன.

மேலும் ஏழு பெய்லி (Bailey) பாலங்களை அமைப்பதற்கான சாதனங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். இவற்றை அமைப்பதற்கான தொழில்நுட்பக் குழுவினரும் விரைவில் அங்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, அத்தியாவசிய மருந்துகள், போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் அடங்கிய மொத்தம் 68.5 டன் நிவாரணப் பொருட்கள் காத்மாண்டுவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளுக்கான நமது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும்.”

இந்திய‌ அரசின் தரவு
இந்திய‌ அரசின் தரவு

நேற்று இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களின் மொத்த எண்ணிக்கைகள்...

நேபாளத்தில் மீட்கப்பட்ட இந்தியர்கள்: 108

மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்ட இந்தியர்கள்: 50

சீனாவிலிருந்து நேபாள எல்லைக்குள் பத்திரமாக நுழைந்த இந்தியர்கள்: 598 (உள்ளூர் அரசு தகவல்களின்படி)

சீனாவிலிருந்து இன்னும் புறப்பட வேண்டிய இந்தியர்கள்: 900 (இவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகம் நேரடியாகவோ அல்லது உள்ளூர் அரசு மூலமாகவோ தொடர்பில் உள்ளது)

காணாமல் போன இந்தியர்கள்: 275

காணாமல் போன இந்திய வம்சாவளியினர்: 128

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User