NEET மறுதேர்வு: தேர்வை விட பெரிய சவால் மாணவர்களின் மனநிலை... கையாள்வது எப்படி?!

May 18, 2026 - 16:01
0
NEET மறுதேர்வு: தேர்வை விட பெரிய சவால் மாணவர்களின் மனநிலை... கையாள்வது எப்படி?!

வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுதேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்குத் தயாராகி, அது நிறைவடைந்ததும் 'அப்பாடா' என நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் பலரும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை நாள்களைக் கொண்டாடச் சென்ற பல மாணவர்கள் கோச்சிங் சென்டர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

நீட் தேர்வு

இது போன்ற சூழலில் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என ஆலோசனை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் முகில் சக்தி.

``ஒரு விஷயத்துக்காக கடும் முயற்சி செய்து, நேரத்தை முதலீடு செய்து, கோச்சிங்குக்காக பண் செலவழித்து அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் வருத்தம் ஏற்படும். அதுவும் மாணவர்கள் எனும்போது மிகவும் சென்சிட்டிவாகவே இதை எடுத்துக்கொள்வார்கள். சோகம், கோபம், எரிச்சல், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாவார்கள்.

NEET தேர்வுக்குத் தயாராகும்போது இந்த நேரத்தில் படிக்க வேண்டும், இத்தனை மணிக்குத் தூங்க வேண்டும் என அனைத்துக்கும் அட்டவணை போட்டு செயல்பட்டிருப்பார்கள். தங்களுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் இதற்கென போட்டிருப்பார்கள். மீண்டும் தற்போது அதே நிலைக்குச் சென்று தயாராக வேண்டும் எனும்போது, 'நான் என்னுடைய பெஸ்ட்டை ஏற்கெனவே கொடுத்துவிட்டேன். மீண்டும் அதை செய்ய முடியுமா?' என்ற பயம், பதற்றம், ஸ்ட்ரெஸ், தன் திறனைப் பற்றிய சந்தேகம் போன்றவை ஏற்படலாம்.

NEET

தன்னால் இதை மீண்டும் சிறப்பாகச் செய்துவிட முடியுமா என்ற மனப்பதற்றம் (Performance Anxiety) ஏற்படலாம்.

உளவியல் ரீதியாக இந்தப் பிரச்னை ஆரம்பித்து மாணவர்களின் தூக்கம், சாப்பாடு, மனநிலை (Mood) என அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் ஸ்ட்ரெஸ்ஸாக காணப்படுவார்கள். மனவலிமை உள்ள, மீண்டு எழும் திறன் கொண்ட (Resilience) மாணவர்கள் இந்த நிலையை சமாளித்துவிடுவார்கள். மிகவும் சென்சிட்டிவான குழந்தைகள், தன்னம்பிக்கை குறைவாக உள்ள மாணவர்கள் சற்று பாதிக்கப்படலாம்.

ஏற்கெனவே NEET தேர்வு, தேர்வு முடிவுகள் சமயத்தில் மாணவர்கள் அவசரப்பட்டு தவறான முடிவுகள் எடுத்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த விஷயத்தில் அதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். குழந்தைகள் மனநிலையை இலகுவாக்கி, அவர்களை இயல்பாகச் செயல்பட வைக்க பெற்றோரின் ஆதரவும் மிகவும் அவசியம். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் மனநலத்தை மனதில் வைத்து அவர்களைக் கையாள வேண்டும்.

மனநல மருத்துவர் முகில் சக்தி

மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோருக்கும் இது போன்ற சூழல்கள் பதற்றத்தையும் கவலையையும் கொடுக்கும். இந்தச் சூழலை இரண்டாகப் பிரித்து அணுக வேண்டும். முதலில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மனதளவில் இயல்பாக இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேச வேண்டும். தங்களுக்கு இருக்கும் பதற்றத்தைப் பிள்ளைகள் மீது காட்டக் கூடாது. இரண்டாவது, பெற்றோர் தங்கள் மனநிலையையும் இயல்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மாணவர்கள் அதிக பதற்றம், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபடுதல், உணர்வுரீதியாக தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்படுவது, எரிச்சலுணர்வுடன் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மனநல மருத்துவர், நிபுணர்களிடம் ஆலோசைனைக்கு அழைத்துச் செல்லத் தயங்கக் கூடாது.

இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத வெளிப்புறத்தில் நடைபெற்ற சம்பவம். இது ஒருவரின் தனிப்பட்ட திறமையாலோ அல்லது கட்டுப்பாட்டாலோ ஏற்பட்ட விஷயம் இல்லை. நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு நடந்த ஒன்று. இப்படிப்பட்ட நேரங்களில், நம்மால் கட்டுப்படுத்த முடியும் விஷயங்கள், நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் என இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை கவனித்து, அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க வேண்டும். ஆனால் நம்மால் மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கவலைப்பட்டால் எந்த பயனும் கிடைக்காது. எது நம் கையில் இருக்கிறது, எது இல்லை என்று புரிந்து கொண்டு அந்த சூழ்நிலையை அணுகினால் மனஅழுத்தம் குறையும், சரியான முடிவும் எடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் முகில் சக்தி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User