`தேவையே கண்டுபிடிப்பின் தாய்' : 15 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு! - Earmuffs உருவான சுவாரஸ்ய கதை!

Mar 13, 2026 - 14:31
 0
`தேவையே கண்டுபிடிப்பின் தாய்' : 15 வயது சிறுவனின் கண்டுபிடிப்பு! - Earmuffs உருவான சுவாரஸ்ய கதை!

உலகை மாற்றிய பல கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களில் மட்டுமே பிறக்கவில்லை; அவை அன்றாடத் தேவைகளிலிருந்தும், தனிப்பட்ட சிரமங்களிலிருந்தும் தான் பிறந்திருக்கின்றன.

அத்தகைய ஒரு எளிய, ஆனால் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புதான் `இயர்மஃப்ஸ்'. கடும் குளிரில் இருந்து காதுகளைப் பாதுகாக்க இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இதன் பின்னால் இருப்பது, ஒரு 15 வயது சிறுவனின் விடாமுயற்சியும் அவனது பாட்டியின் அன்பும்தான்.

earmuffs
earmuffs

அந்தச் சிறுவனின் பெயர் செஸ்டர் கிரீன்வுட் (Chester Greenwood). 1858-ம் ஆண்டு அமெரிக்காவின் மைனே (Maine) மாகாணத்தில் உள்ள ஃபார்மிங்டன் (Farmington) என்ற ஊரில் பிறந்தவர் செஸ்டர். அந்த ஊர் உறைய வைக்கும் கடும் குளிருக்கு பெயர் போனது. செஸ்டருக்கு காதுகள் சற்றே பெரிதாகவும், குளிரைத் தாங்க முடியாத அளவுக்கு மிக மென்மையானதாகவும் இருந்தன.

1873-ம் ஆண்டின் ஒரு குளிர்காலத்தில், தனது நண்பர்களுடன் பனியில் சறுக்கி விளையாட சென்றார் செஸ்டர். கடும் குளிர்காற்று வீசியதால், அவரது காதுகள் விறைத்துப் போய் சிவந்து வலி எடுக்கத் தொடங்கின. குளிரில் இருந்து தப்பிக்க ஒரு மஃப்ளரை (scarf) தலையைச் சுற்றி கட்டிப் பார்த்தார். ஆனால், கம்பளியால் ஆன அந்த மஃப்ளர் அவருக்கு எரிச்சலையும், அரிப்பையும் கொடுத்தது மட்டுமல்லாமல், விளையாடுவதற்கும் பெருந்தடையாக இருந்தது.

earmuffs
earmuffs

அப்போதுதான் அந்த 15 வயது சிறுவனின் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஒரு மெல்லிய இரும்புக் கம்பியை வளைத்து தனது தலையின் அளவுக்கு ஏற்றாற்போல் இரண்டு வளையங்களை உருவாக்கினார். நேராக தனது பாட்டியிடம் சென்று, அந்த வளையங்களின் உட்புறத்தில் மென்மையான வெல்வெட் துணியையும், வெளிப்புறத்தில் நீர்நாய் (Beaver) தோலிலான ரோமத்தையும் வைத்துத் தைத்துத் தரச் சொன்னார். பேரன் கேட்டுக் கொண்டபடியே பாட்டியும் தைத்துக் கொடுக்க, உலகின் முதல் `இயர்மஃப்' உருவானது!

இதை அணிந்து கொண்டு அவர் மீண்டும் பனிச்சறுக்கு விளையாடச் சென்றார். முதலில் அவரது காதுகளைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், குளிரில் அவர்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு நடுங்க, செஸ்டர் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாக விளையாடியதைப் பார்த்ததும் அவர்களுக்கும் அது போன்ற ஒன்று தேவைப்பட்டது.

செஸ்டரின் இந்தச் சிறிய கண்டுபிடிப்புக்கு ஊர் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தனது 19-வது வயதில் (1877, மார்ச் 13) இந்த சாதனத்திற்காக காப்புரிமை (Patent) பெற்றார் செஸ்டர்.

earmuffs
earmuffs

முதலில் தனது கண்டுபிடிப்பிற்கு Greenwood's Champion Ear Protectors என்று பெயரிட்டார். ஃபார்மிங்டன் நகரிலேயே இதற்காக ஒரு பெரிய தொழிற்சாலையைத் தொடங்கினார். முதல் உலகப் போரின் போது, கடும் குளிரில் போராடும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக, அமெரிக்க அரசு இவரிடம் ஒப்பந்தம் செய்து லட்சக்கணக்கான இயர்மஃப்களை தயாரித்து வாங்கியது. இதனால் அவரது சொந்த ஊரான ஃபார்மிங்டன், 'உலகின் இயர்மஃப் தலைநகரம்' என்று புகழப்பட்டது.

`தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ என்பார்கள். ஒரு சிறிய உடல்நலச் சிக்கலைத் தீர்க்க அவர் எடுத்த முயற்சி, இன்று பனிப்பிரதேசங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. வயது என்பது வெறும் எண் தான் என்பதையும், கூர்மையான கவனிப்பும் எளிய தீர்வும் இருந்தால் எவரும் சாதனையாளராக முடியும் என்பதையும் செஸ்டரின் கதை நமக்கு உணர்த்துகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0