மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

May 08, 2026 - 13:01
0
மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடும்பம் கடந்த மாதம் 25ம் தேதி இரவு உறவினர்களை அழைத்து தங்களது வீட்டில் விருந்து கொடுத்தனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர். அன்று இரவு விருந்தினர்கள் சென்ற பிறகு அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு மகள்கள் தர்ப்பூசணி சாப்பிட்டனர். அவர்கள் அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அதிகாலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜெ.ஜெ.மருத்துவமனையில் ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்ப்பூசணி சாப்பிட்டதில் குடும்பமே உயிரிழந்ததாக செய்தி பரவியதால் தர்ப்பூசணி விலையும் அதிரடியாக சரிந்தது. இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மரணத்திற்கான தெளிவான காரணம் தெரியாமல் இருந்தது.

அவர்களின் உடல் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் இறந்தவர்கள் உடலில் உள்ளுறுப்புகள், வயிற்று உள்ளடக்கங்கள், பித்தநீர் மற்றும் வயிற்றுக் கொழுப்பு மாதிரிகளில் துத்தநாக பாஸ்பைடின் எனப்படும் எலி மருந்து இருந்ததற்கான தடயங்கள் இருந்தது தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் பிரவின் கூறுகையில்,'' இறந்தவர்கள் உடலில் zinc phosphide எனப்படும் ஒரு வகை எலி மருந்து இருந்தது தடயவியல் ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இறந்தவர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட தர்ப்பூசணியை சோதனை செய்ததில் அதிலும் எலி மருந்து கலந்து இருப்பது தெரிய வந்தது. மற்ற உணவுப்பொருள் எதிலும் எலி மருந்து கலந்திருக்கவில்லை. அவர்கள் எதிர்பாராமல் எலி மருந்தை சாப்பிட்டார்களா அல்லது வேண்டுமென்று எலிமருந்தை தர்ப்பூசணியில் கலந்து சாப்பிட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் அதிக அளவு வாந்தி எடுத்திருந்ததால் விஷம் அதில் வெளியேறிவிட்டது. எனவேதான் 54 முறை டெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடும்பத்தோடு விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது''என்றார்.

தடயவியல் அறிக்கை மூலம் மர்ம மரணத்திற்கு விடை கிடைத்து இருக்கிறது. இப்போதுதான் மக்கள் தர்ப்பூசணியை நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User