மைக்ரோ லெவல் சிக்கனம்; திறன்மிகு நிர்வாகம்; அணையின் தளபதிகள் | மேட்டூர் அணை ஓசை 44
காவிரி-மேட்டூர் அணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்ட அளவை அரசு ஒதுக்கினாலும், மேட்டூரில் திட்ட நிர்வாகம் சிறப்பாகவும், சிக்கனமாகவும் செயல்பட்டு செலவுகளை குறைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தது. அதற்கு பல உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன!
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியிடப்படும் அரசாணைகளின் நகல்கள், மெட்ராஸ் அரசு அச்சகத்தில் அச்சிட்டு, காவிரி மேட்டூர் திட்ட அதிகாரிகளுக்கு அனுப்பவது வழக்கமாக இருந்தது. 31.10.1928 முதல் இந்த நடைமுறை நிறுத்தப்படுவதாக மெட்ராஸ் அரசு அச்சகத்தின் சூப்பிரண்டென்ட்டன்ட் அறிவித்தார். அனைத்து பொறியாளர்களுக்கும் நகல்களை அனுப்புவது வீண் செலவு என்றார். நிலம் கையகப்படுத்தும் டெபுடி கலெக்டர்களுக்கு, நிலத்தை கையகப்படுத்துதல் சட்டம் குறித்த ‘கெஜட்’ அவசியம் தேவை என்பதால், சிறப்பு வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டராக பணிபுரிந்த ஏ.ஜி. லே என்பவர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதன்படி டெபுடி கலெக்டர் மற்றும் தனக்கு ஒரு நகல் அனுப்பி வைக்க வேண்டியும், அதற்கு உண்டான தொகை குறித்து தெரிவித்தால் அதை செலுத்தி பெற்றுக் கொள்வதாகவும் எழுதிய அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தேவையான பிரதிகள் மட்டும் அச்சிடப்பட்டு, பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள அரசு உத்தரவிட்டது. (G.O. எண் 115 தேதி 17.02.1928). தேவையின்றி பல நகல்கள் பலருக்கும் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
மோட்டார் படகு வாங்குவது குறித்து:
நீர்த்தேக்க ஏரியில் தவறி விழும் மக்களை மற்றும் தொழிலாளர்களை நீரில் மூழ்கி விடாமல் அவர்களின் உயிர் காப்பதற்காக, ஒரு மோட்டார் படகு வாங்குவது குறித்து கருத்துரு மெட்ராஸ் மாகாண அரசுக்கு தலைமை பொறியாளர் முல்லிங்கிஸ், 1928ல் கடிதம் எழுதுகிறார். அது குறித்து விரிவான விவாதங்கள், கடிதப்போக்குவரத்து, பல நாட்கள் நடைபெற்று, இறுதியில் 1931-ல் அனைத்து சுவர் மேல் எழும்பி வரும்போது முடிவு செய்து கொள்வது என தீர்மானம் செய்யப்பட்டது.
அணை கட்டி முடிக்கப் பெறும் போது, மிகப் பரவலாக நீர் தேங்கி நிற்கும். அப்போது கைவிடப்பட்ட மேடான பல இடங்கள், தீவு போல விடப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற வழியின்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். சுமார் 60 மைல் சுற்றளவில் பல இடங்கள் காடுகளால் சூழப்பட்டு இருப்பதால் சாலை மார்க்கமாக அவர்களை மீட்பதற்கு வழி இல்லை. மேலும் மீன்பிடி தொழில் செய்பவர்கள், பிற மக்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால் பரிசல் மூலம் விரைவாக அவர்களை மீட்க முடியாமல் போகும் அபாயம் உள்ளது எனவும் தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கப்பட்டது.
வனத்துறை அலுவலர்களின் பணிக்கு மற்றும் காவல்துறை, வருவாய் துறை தபால் நிலைய அலுவலர்கள் போன்றவர்களின் வசதிக்கும் மோட்டார் படகு தேவைப்படலாம் என்ற யோசனை கலெக்டர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. கடல்மட்ட அளவு MSL +791க்கு மேல் நீர் நிரம்பும் போது, சுமார் 31 இடங்கள் அந்த பகுதிகளில் தனித்தீவுகளாக கைவிடப்படும் என்று அளவீடுகளின் மூலம் தெரியவந்தது. சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமையும் இந்த இடங்களில் ஒரு தனித்தீவு மட்டும் சுமார் 218 ஏக்கர்களைக் கொண்ட வனப்பகுதி எனவும் அளவிடப்பட்டது. மூலக்காடு காவிரிபுரம், நாகமரை, சோளப்பாடி, கோனூர் போன்ற கிராமங்களுக்கு உட்பட்ட எல்லைகளில் இந்த தீவுகள் அமையும் எனவும் கணக்கிடப்பட்டது.
அதே சமயம், மேட்டூர் திட்டத்தின் படி அணை கட்ட இந்த மோட்டார் படகு எந்த விதத்திலும் பயன்படாது எனினும் தொலைநோக்குப் பார்வையில் நீர் நிரம்பும் போது மற்ற அரசு துறைகளுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் ஒட்டு மொத்த நீர் பரப்பை ஆய்வு செய்ய இந்த மோட்டார் படகு பயன்படும் என்றும் தலைமை பொறியாளர் C.T. முல்லிங்ஸ் கருத்தை பதிவு செய்தார். இது குறித்தான நீண்ட கடித பரிமாற்றங்கள் அவ்வளவு எளிதில் மோட்டார் படகு வாங்குவதற்கு அரசு அனுமதி அளிக்க தயாராக இல்லை என்பதை காட்டுகிறது. இதற்காக பணம் செலவழிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த கருத்து பரிமாற்றத்தின் மூலம் அணைக்கட்டில் நீர் நிரம்பிய பிறகு நீர்த்தேக்கத்தின் அகலமான பகுதி அதிகபட்சமாக 4 மைல் அளவுக்கு அமையும் என்பதும், நீளவாக்கில் ஒரு பகுதியில் மட்டும் 20 மைல்கள் என்ற அளவிற்கு நேராக நீண்டிருக்கும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேட்டூர் அணைக்கு முன்பு பெரியார், கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே கட்டப்பட்ட அணைகளில் “ஆய்வுக்காக” இதே போன்று மோட்டார் படகுகள் வாங்கி பயன்பாட்டில் உள்ளது என்ற தலைமை பொறியாளரின் கருத்தும் மேட்டூரில் மோட்டார் படகு (லான்ச்) வாங்குவதற்கு முடிவெடுக்க உதவி செய்தது. சிறிய அளவில் செலவு செய்வதாக இருந்தாலும் அதன் பயன்பாடு, உண்மைத் தன்மை, விலை மதிப்பீடு இவைகளை ஆராய்ந்த பிறகுதான் செயல்படுத்தப்பட்டது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணமாக திகழ்கிறது. (G.O. எண்-2132 I, 27.08.1928)
காவிரி- மேட்டூர் திட்டத்தில், அணை கட்டுமானத்தின் மேற்கு டிவிஷனில் பியூனாக பணிபுரிந்த “கணபதி பண்டாரம்” என்பவர், தனக்கு சம்பள உயர்வு தரும்படி, 1930 ஜனவரி மாதம் விண்ணப்பிக்கிறார். இந்த திட்ட வேலைக்கு வருவதற்கு முன்பு சுமார் ஒன்றரை வருடங்கள் வேறு அரசு வேலைகளிலும், சர்வே உதவியாளராகவும் பணிபுரிந்ததாக சான்றுகளை சமர்ப்பித்து ஊதிய உயர்வுக்கு தேவையான நான்கு வருட காலம் தனக்கு இருப்பதாகவும், தகுதி உள்ளது என்ற அடிப்படையில் குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளார்.
இதை ஆய்வு செய்த தலைமை பொறியாளர், அரசின் விதிகளின்படி நான்கு வருட சர்வீஸ் இருப்பதால் கணபதி பண்டாரத்திற்கு ஊதிய உயர்வு அளிக்கலாம் என பரிந்துரைக்கிறார். அதே சமயம், இந்த மேட்டூர் திட்டத்திற்கு முன்பு ஒன்றரை வருடங்கள் செய்த வேலை லஸ்கர் என்ற உதவியாளர் வேலை என்பதால் இது சர்வீஸ் கணக்குக்கு எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்து பல கடித பரிமாற்றம் நடந்துள்ளது, நம்மால் தரவுகளின் மூலம் காண முடிகிறது. மேற்கண்ட பியூன் 1. 7. 1927க்கு முன்பு மூன்று பதவிகளில் வேலை செய்திருந்தாலும் ரூ12, ரூ 12, ரூ 15 என்ற மாத சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை நிலையான சம்பளமாக (FIXED SALARY) இருந்ததால் சர்வீஸுக்குள் சேராது, எனவே பியூன் கணபதி பண்டாரத்திற்கு அரசினால் ஊதிய உயர்வு மறுக்கப்படுகிறது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொற்ப தொகை தானே என்று கூட இல்லாமல் பிரிட்டிஷ் அரசு விதிகளின்படியே வேலை செய்தது என்பதா? சிக்கனமாக சம்பளத்தை தந்து நன்கு வேலை வாங்கிக் கொண்டார்கள் என்பதா? நம்மால் அறுதியிட்டு கூற இயலவில்லை. வாசகர்களின் யூகத்துக்கு விட்டு விடுகிறோம். (G.O. எண்-2784 தேதி 30.09.1930)
பயணப்படி மற்றும் அலவன்ஸ் (G.O எண்-49 W தேதி 06.01.1932)
மேட்டூர் அணை கட்டுமானம், திறம்பட குறித்த காலத்துக்கு முன்பே கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம் சிறந்த திட்டமிடலும், தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வும்தான் என்பதை நாம் முன்பே கண்டோம். தொழிலாளர்கள் அவ்வாறு சிறப்பாக பணியாற்றுவதற்கு அவர்களின் நல்ல உடல் நிலை என்பதையும் முன் அத்தியாயங்களில் வாசித்திருந்தோம். தொழிலாளர்கள் உடல்நிலை பல்வேறு தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சுகாதார அதிகாரிகளின் இடைவிடாத கண்காணிப்பு மற்றும் மருத்துவ உதவிகள் என்பதும் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.
அதேசமயம் 1932இல் காவிரி- மேட்டூர் திட்டத்தில் பணிபுரிந்த சுகாதார அதிகாரிகளுக்கு (HEALTH OFFICER) வழங்கப்பட்ட அலவன்ஸ் மற்றும் பயணப்படி அதுவரை 1932-க்கு முன்பு தரப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு ரூபாய் 25லிருந்து ரூ 20 ஆகவும், மிதிவண்டிக்கு (சைக்கிள்) ரூ 4 என குறைக்க, மேற்கண்ட அரசாணை மூலம் 1.12.1931 முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று இருந்தாலும் மேற்கண்ட முடிவு மேற்கண்ட தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்க வல்லது.
ஒரு ரூபாயை செலவழிப்பதற்கும் கூட மிகுந்த யோசனை செய்த பிறகே அமல்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிய வருகிறது.
ஒழுங்கு நடவடிக்கை (G.O. எண்-2360 தேதி 30.10.1933)
காவிரி- மேட்டூர் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கிழக்கு பிரிவில், உதவி பொறியாளராக பணியாற்றிய திரு காளீஸ்வர அய்யர் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக இரண்டு சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேற்பார்வை பொறியாளர் அளித்த அறிக்கையும், ஆய்வு செய்து தலைமை பொறியாளர் தெரிவித்த கருத்துக்களையும் பொதுப்பணித்துறை பரிசீலித்தது.
முக்கிய கண்டறிதல்கள்: 16 .12. 1932 அன்று “வரகலூர் ரெகுலேட்டர்” அமைப்பின் அருகே கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கட்டமைப்பின் அடித்தளம் பாதிக்கப்பட்டது. உடைப்பை முறையாக அடைத்து தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ள சுமார் 7 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதம் காரணமாக ரெகுலேட்டர் சுவரில் விரிசல் ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மேற்பார்வையாளருடன் கடிதப் போக்குவரத்தில் காலத்தை வீணடித்ததாக மேற்கண்ட உதவி பொறியாளர் திரு காளீஸ்வர அய்யர் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உடைப்பை அடைத்தல், அடித்தளத்தை வலுப்படுத்துதல், அரிப்பினால் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்புதல் மற்றும் கல் தடுப்புச் சுவற்றை சீரமைத்தல் போன்ற அவசரப் பணிகள் தலைமைப் பொறியாளரால் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் அவை சரி செய்யப்பட்டன.

இரண்டாவது குற்றச்சாட்டு, பொன்னேரி கால்வாயில் கல் தடுப்புச் சுவரை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுத்தியதாக உதவி பொறியாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பொன்னேரி கால்வாய் ரெகுலேட்டர் அமைப்பிற்கு அருகில் உள்ள கல் தடுப்பு சுவர் தாழ்ந்து விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் நீர்க்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கால்வாய் மூடப்பட்டிருந்த காலத்திலேயே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருந்தும், அவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. உதவிப் பொறியாளர் இது குறித்து கூறிய விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று அதிகாரிகள் கருதினர்.
நிர்வாக நடவடிக்கை: தலைமை பொறியாளர் மேற்கண்ட இரு சம்பவங்களும், பணியில் வெளிப்பட்ட தெளிவான அலட்சியத்தை காட்டுவதாகவும், ஏற்கனவே மேற்கண்ட உதவிப் பொறியாளர் பலமுறை எச்சரிக்கை பட்டிருந்ததால் அரசால் அவருக்கு கண்டன தண்டனை (CENSURE WARNING) வழங்கவும், இனிமேல் இது போன்ற புகார்கள் எழுந்தால் அவரது ஊதிய உயர்வுகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கவும் பரிந்துரைத்தார்!
யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் தவறு செய்பவர்கள் மீது பிரிட்டிஷ் மெட்ராஸ் மாகாண அரசால் கடும் தண்டனை எடுக்கப்பட்டது என்பது இந்த நிகழ்வு மூலம் உறுதியாகிறது
மைக்ரோ லெவல் சிக்கனம்: (G.O. எண்-2568-I தேதி 23.11.1934)
பொதுப்பணித்துறை பணியாளர்கள் நியமனம் மற்றும் ஊதிய விகிதம் தொடர்பாக பிரிட்டிஷ் மெட்ராஸ் மாகாண அரசு எடுத்த சிக்கன நடவடிக்கைகள் மைக்ரோ லெவலிலும் இருந்தது. மாதம் ரூ12 ஊதிய விகிதத்தில் இரண்டு பியூன்கள், உதவி இயக்குனர் திரு L.B. கிரீன் அவர்களிடத்தில் பணி செய்ய ஒதுக்கப்பட்டிருந்தது. திரு கிரீன் மேட்டூர் அணை கட்டுமானம் முடிந்த பிறகு செயலில் இல்லாத இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களை விற்று பணமாக்க, சிறப்பு அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்டு இருந்தார். கிரீன் ரூ 12 மாத ஊதியத்தில் இரண்டு பியூன்களுக்கு பதிலாக, ஒரே ஒரு பியூன் ரூ 17 மாத ஊதியத்தில் பணியாற்றி செலவை குறைக்க அரசிடம் அனுமதி கூறினார். (என்ன கொடுமை சார் இது?!) மேலும், அவரிடம் பணிபுரிந்த சுருக்கெழுத்தர் திரு. மகாராஜா என்பவர் தட்டச்சு மற்றும் கீழ்நிலை சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மேல்நிலை சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அரசு விதிகளின் படி, ரூ 25 சுருக்கெழுத்து படியை பெற அவர் தகுதியற்றவர் என அவரின் ஊதிய விகிதம் குறைக்கப்பட்டது.
நிர்வாக செலவினங்களை குறைப்பது தொடர்பான வாய்ப்புகள் அவை மிகச் சிறிய அளவில் இருந்தாலும் அவற்றை பிரிட்டிஷார், காவிரி மேட்டூர் திட்டத்தில் செயல்படுத்தியதால் தான் மொத்த திட்டச் செலவில் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் மீதம் பிடித்து சிக்கனமாக செலவு செய்திருப்பது உறுதி ஆகிறது. மேற்கண்டவை சில உதாரணங்கள் மட்டுமே இதுபோன்ற பல நடவடிக்கைகள் உள்ளன. அனைத்தையும் தொகுத்தால் தனியாக ஒரு புத்தகமே போடலாம்.
தற்போது ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி என்ற சொற்பிரயோகத்தை பலரும் கண்டு இருக்கலாம். அது என்ன குறுவை அல்லது சம்பா? முழு அர்த்தத்தை அறிந்து கொள்வோமா?
டெல்டா மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் குறுவை மற்றும் சம்பா என்று “பயிர் சுழற்சியை” அவ்வாறு அழைக்கின்றனர்.
குறுவை (முதல் போகம்): ஜூன் முதல் வாரத்தில் விதைப்பது, ஜூலை முதல் வாரத்தில் நடவு செய்வது, செப்டம்பர் நான்காவது வாரத்தில் அறுவடை செய்தல். குறுவை, சம்பா இருபோக சாகுபடி நிலங்களில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் விதைப்பது, பிப்ரவரி நான்காவது வாரத்தில் அறுவடை செய்வது.
ஒற்றை போக நிலங்களில் சம்பா சாகுபடி மட்டும் மேற்கொள்வது. குறுவை இரண்டாம் பாகம் சாகுபடி ஜூலை மூன்றாவது வாரத்தில் விதைத்தல் ஆகஸ்ட் மாதம் நான்காவது வாரத்தில் நடவு செய்தல், பிப்ரவரி முதல் வாரத்தில் அறுவடை செய்தல்.
இந்த முறைகளில் விவசாய பணிகள் ஒன்றோடு ஒன்று மோதாமல் நடைபெறுவதால் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலம் உலர்ந்து, வளம் பெறுவதற்கும், பசுந்தாள் உரப் பயிர்களை வளர்ப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். நெற்பயிரை பாதிக்கும் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். இருபோக நிலங்களில் குறுவையைத் தொடர்ந்து சம்பா பயிரிடும் முறையே சிறந்த பலனை அளிக்கும் என அப்போதைய இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

அந்த பயிர் சுழற்சி கால அடிப்படையில் தான் ஜூன் மாதம் 12ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு போதுமான அளவு காவிரியில் நீர் ஓட விடும்போது, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் அமோக விளைச்சலை தரும் என்பது கவனம் பெரும் முக்கிய தேவையாகிறது. இதன் அடிப்படையில் மேட்டூர் அணையின் அவசியம் நன்கு புலப்படுவதோடு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார மையப்புள்ளியாக திகழ்கிறது. குறுவைப் பயிர் என்பது “கரீப்பருவம்” என்றும் சம்பா பயிர் என்பது “ராபி” பருவத்தில் விளையும் பயிர் என்றும் வட இந்தியாவில் அழைப்பதுண்டு.
இந்தியா முழுவதும் நிலவரி ஆண்டு என்பது FASLI YEAR என்று அழைக்கப்படும். இது ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை உண்டான ஒரு வருட விவசாய கணக்கு பார்க்கப்படும் காலமாக அமைந்துள்ளது என்பது கூடுதல் செய்தி!
மேட்டூர் அணை கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்களை நாம் வாசித்து கடந்து வந்திருந்தாலும், பொது மக்களுக்கு இன்றளவும் பயன்தரத்தக்க, கட்டுமானத்தின் போது பல்வேறு பொருட்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிய சேலம்-மேட்டூர் ரயில் பாதை அமைப்பு மிக முக்கியமான செயல்பாடாகும்.
சேலம் மேட்டூர் ரயில் பாதை அமைத்தது எப்படி என்ற விவரம் தேடிய போது, சேலம் “ஆவணக் காப்பகத்தில்” இது குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று புரிந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி முறையான விண்ணப்பம் அளித்து, அவரின் அலுவலகத்திலிருந்து ஆவணக் காப்பக அலுவலருக்கு எழுத்துப்பூர்வ அனுமதி உத்தரவை பெற்று, அங்கு சென்று ஆவணங்களை தேடினேன். இது நடந்தது ஆகஸ்ட் 2023-ல்.
சேலம்-மேட்டூர் ரயில் பாதை திட்ட அனுமதி, தலைமைப் பொறியாளரிடமிருந்து சேலம் மாவட்ட கலெக்டருக்கு 21.04.1927-ம் தேதியிட்ட கடிதம் மூலம், சேலம் - மேட்டூருக்கு இடையே புதிய ரயில் இருப்புப் பாதையை அமைப்பதற்கான அனுமதி உத்தரவை கோரியதாக இருந்தது. அதன்படி சேலம் ரயில் நிலையத்திலிருந்து, ஓமலூர், தொளசம்பட்டி, மேச்சேரி ரோடு, குஞ்சாண்டியூர் மற்றும் மேட்டூர் அணை போன்ற இடங்களில் ரயில் நிலையங்களும், போதிய லெவல் கிராசிங்குகளும் அமைப்பதற்கான அனுமதி 31.05.1927 அன்று அரசால் வழங்கப்பட்டது.

ரயில் பாதையை குறிப்பிடும் வரைபடம் சேலம் - மேட்டூருக்கிடையில் அமையப்பெற்ற இருப்புப் பாதை வரைபடத்தில் “சிகப்பு மை” இட்டிருப்பதை காணலாம். பட்டையான வெள்ளைக் கோடு காவிரி ஆற்றின் பாதையை குறிப்பதையும் இந்த வரைபடத்தின் மூலம் காணலாம். திட்டத்தின் படி ரயில் பாதையின் மையப்புள்ளியிலிருந்து (CENTER POINT) அதன் இரு பக்கங்களிலும் 100 அடிக்கும் குறையாமல் இடம் கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் திட்டத்தின் அவசரத்தேவை காரணமாக உடனடியாக ரயில் பாதை அமைப்பு ஏற்படுத்த பணிக்கப்பட்டது. இந்தப் பணி மேற்கொள்வதால் பாதையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த 18 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டி வந்தது. பெரும்பாலான நிலங்கள் வறண்டு இருப்பதாகவும் (DRY LANDS) சுமார் 600 ஏக்கர் நிலங்கள் தோராயமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 300 என்ற அளவில், ரூபாய் 1,80,000/- இதற்காக ஒதுக்கப்பட்டு, கையகப்படுத்த சிறப்பு டெபுடி கலெக்டர், 3 பியூன்கள், 4 கிளார்க், 2 சர்வேயர் மற்றும் 2 வருவாய் ஆய்வாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டனர்.
நில உரிமையாளர்களின் இடம், கிணறு மற்றும் சொத்து விவரங்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஈட்டுத்தொகை கணக்கிட்டு அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 33 ரூபாயிலிருந்து நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கவல்லது. ஒவ்வொரு உரிமையாளருடைய முழு விவரமும் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனி கோப்பு இடப்பட்டு, முடிந்தவரை மதிப்பீடுகளை குறைத்து குறைவான தொகையை ஈட்டுத் தொகையாக தரப்பட்டது என்ற புரிதலை நமக்கு கோப்புகள் தருகின்றன. ஆனால், உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு இந்தத் தொகையை வாங்கிக் கொண்டதும் தெரிய வருகிறது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தார்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததும் கோப்புகளின் மூலம் தெரிய வருகிறது. உட்பூசல்கள் இருந்துள்ளன. சில இடங்களில் ஒரு ஏக்கர் ரூபாய் 75 என்ற விலைக்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஈட்டுத்தொகை வந்த வரைக்கும் அவர்களுக்கு லாபம் என்ற மனநிலையிலும் பல நில உரிமையாளர்கள் இருந்துள்ளனர் என்பதும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக உள்ளது.
எப்படி இருப்பினும் அவர்கள் தந்த நிலங்களின் மீது ரயில் பாதை போடப்பட்டு, முக்கிய கட்டுமானப் பணியான மேட்டூர் அணை கட்டப்பட்டதற்கு அவர்களின் பங்கும் பெரிய அளவில் உதவி புரிந்திருக்கிறது என்றே கூற வேண்டும். அவர்களின் தியாகம் நாட்டு மக்களுக்கு பயன் தரும் செயலாக மாறி, சுமார் 100 ஆண்டுகளாக இன்னமும் ரயில் பாதை மக்களின் போக்குவரத்துக்கு உதவி வருவது சிறப்பம்சமாகும். பல லட்சம் டன்கள் எடையுள்ள கட்டுமான பொருட்களின் போக்குவரத்துக்கு இந்தப் பாதை பயன்பட்டிருக்கிறது. 1929 இல் திட்டப் பணிகள் முடிவடைந்து ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தது மகிழ்ச்சியான சிறப்பம்சம்.
சிறப்பாக திட்டம் தீட்டி, திறமையான முறையில் அணையைக்கட்டி எழுப்பி, தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்தரத்தக்க அளவில் காவிரி - மேட்டூர் திட்டத்தில் முக்கியப்பங்காற்றிய பல தளபதிகளைக் குறித்து நாம் அறிந்து கொள்வது நம் கடமையல்லவா?
அந்தநோக்கில் இந்தத்திட்டத்தில் ஆரம்பகாலத்தில் இருந்து பணியாற்றிய முக்கியப் பொறியாளர்கள், உதவிய அரசு அதிகாரிகள் இவர்களைக் குறித்து தகவல்களைத் தொகுக்க முயற்சித்திருக்கிறேன். சென்னை, டெல்லி மற்றும் பிரிட்டிஷ் நூலகங்கள் வரை நமது தேடல் நேரிலும், இணையம் மூலமும் இருந்தது. இவர்களைப் பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்வது நம் அனைவரின் சார்பாக இவர்களுக்கு செய்யும் அஞ்சலியாகவும், நன்றிகளை காணிக்கை ஆக்குவதாகவும் கருதலாம்.
இந்த காவிரி- மேட்டூர் திட்டத்தில் பணியாற்றிய முக்கியமானவர்கள்
1. ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள்.
(நம்மை பொறுத்தவரை இவர்கள் மிக, மிக முக்கியமானவர்கள்)
பிரிட்டிஷ்பொறியாளர்கள் (BRITISH ENGINEERS & OTHERS)
2. Col. W.M. Ellis., Royal Engineer 3. Sir. C. T. Mullings., Engineer-in-Chief
4. V. Hart. (Vincent Hart) 5. Captain H.A. Irwin 6. M. Butler, Accountant General
7. A.H.S. Campbell., Executive Engineer 8. R.F. Stoney., Chief Engineer 9. Henshaw
10. J.G. Dalton 11. A.G. Leach., Secretary to Government 12. F.M. Dowley., Chief Engineer
13. Roberts 14. Mark Clemenston 15. Basket 16. Mac Michael 18. Goschen 19. Smeeth.Dr
20. A. Vipan 21. D. W. Gollan 22. T. I. S. Mackay., Structural engineer 23. H. G. Jackson
24. W.H. Turner 25. F.T. Learmonth 26. Mr. Nirody 27. A.Y.G. Campbell
28. C.G. Barber, Superintendent of Works. 29. Harris, Bryan Alfred
இந்தியப்பொறியாளர்கள் / அதிகாரிகள்
1. L.D. வெங்கடராமஅய்யர். 2. S. பாஸ்கரஅய்யர் (ராவ்பகதூர்) 3. N. சுவாமிநாத அய்யர் (திவான்பகதூர்) 4. R. நரசிம்ம அய்யங்கார் (திவான்பகதூர்) 5. G. ராமசாமி அய்யர் (ராவ்பகதூர்)
6. N. பரமேஸ்வரன் பிள்ளை (ராவ்பகதூர்) 7. L. வெங்கடகிருஷ்ண அய்யர் (ராவ்பகதூர்) 8. N. கேசவராவ் 9. N. கோவிந்தராஜ அய்யங்கார் 10. J. மத்தாய் 11. A.R. வெங்கடஆச்சார்யா (ராவ் சாகிப்) 12. R. மகாதேவ அய்யர்
13. M. S. திருமலை அய்யங்கார் 14. T. S. வெங்கட்ராம அய்யர்
15. N. பத்மநாப அய்யர் 16. R. S. ராஜாங்கம் அய்யர்
17. S. V. கனகசபை பிள்ளை (ராவ்சாகிப்) 18. V. S.ராமசுந்தரம்
19. T. R. நரசிம்ம ஆச்சர்யா 20. M. B. கிருஷ்ணசாமி அய்யங்கார்
21. G. G. கிருஷ்ணய்யர் 22. P. S.விஸ்வநாதஅய்யர் (ராவ்சாகிப்)
23. S. ராமானுஜ ஆச்சார்யா 24. Y. ஹரி நாராயணா 25. M. V. ராமசாமிஅய்யர்
26. R. வைத்தியநாத அய்யர் 27. N. சுந்தர சிவராவ் 28. M. S. சீனிவாசராவ்
29. A. சுப்பிரமணிய அய்யர் 30. C. S. சிவராம அய்யர் 31. K. வெங்கடஆச்சார்யலு
32. C. கிருஷ்ணய்யர் 33. S. பஞ்சாபகேச அய்யர் 34. P. சீனிவாசஅய்யர்
35. M. முகமது சிக்கந்தர் சாகேப் 36. T. V. சுந்தரேச அய்யர் 37. V. சேகர மேனன்
38. K. S. நல்லபெருமாள் பிள்ளை 39. T. V. சேஷய்யர் 40. G. V. லட்சுமிநாராயணா
41. S. வைத்தியநாத அய்யர் 42. S. V. பாலசுப்பிரமணியஅய்யர்
43. M.சத்தியநாராயணமூர்த்தி 44. A. சிதம்பரம்பிள்ளை (ராவ்சாகிப்)
45. P. அய்யாசாமி அய்யர் 46. N. ரகுநாதராவ் 47. N. S. சுப்பிரமணிய அய்யர்
48. G. கிருஷ்ணசாமி அய்யர் 49. D. பூர்ணய்யா 50. S.R. கோபாலன்
51. M. N.வெங்கடேஸ்வரன் 52. P. சுப்ரமணியம் 53. S. R. நரசிம்மம்
54. S. நரசிம்ம காமத் (ராவ் சாகிப்) 55. C. T. டி'சில்வா
56. V. ராதாகிருஷ்ண அய்யர் 57. K.S. விஸ்வநாத அய்யர் 58. V. சேதுசர்மா
59. L. M. சுந்தரேச அய்யர் 60. N. தணிகாசலமுதலியார் 61. M. N. காமத்
62. N. ராமசாமிஅய்யர் 63. N. அச்சுதமேனன் 64. B. R.சோமயாஜூலு
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள். இதுபோக, காண்ட்ராக்டர்கள், இயந்திரங்கள் சப்ளை செய்தவர்கள், பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் போன்றவர்களின் கூட்டுமுயற்சியாக உருவெடுத்தது தான் மேட்டூர்அணை.
பிரிட்டிஷ் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து பெரிய தேடலை சற்று சிரமங்களுடன் மேற்கொண்டபோது, சிலரின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை கண்டறிய முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது.
அதன் தொகுப்பை அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்!
காவிரி நன்னீர் சிறப்பு
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)