'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் விஜயகாந்த், பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய நினைவுகள்.! - பிரேமலதா| Live
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல்
பன்முகத் திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற தரமான படைப்புகளை வழங்கி, தனது தனித்துவமான திரைக்கதை அமைப்பு, வசன நடை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நமது கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நீண்டகால அன்பும் நட்பும் நிலவியது.

குறிப்பாக 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.
கேப்டன் அவர்களின் கலைப் பயணத்தில் பாக்யராஜ் அவர்கள் வகித்த நட்பும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல்
தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் திரு. பாக்யராஜ் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன.
எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார்.

அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி..!
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல்
தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் இயக்குநருமான திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனித்துவமான படைப்புகளாலும், இயல்பான நடிப்பாலும், எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவர், தமிழ் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் இரங்கல்
புகழ்பெற்ற இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன்.
தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான முத்திரை பதித்த அவர், தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பையும் பெற்றார்.
அவரது மறைவு திரைப்பட உலகிற்கும் கலாச்சாரத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அஞ்சலி.

பாக்யராஜ் மறைவிற்கு ஸ்டாலின் அஞ்சலி




ஸ்டாலின் இரங்கல்
"ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன்.

அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்".
முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
சுஹாசினி
"பாக்யராஜ் சார் ரொம்ப சந்தோஷமா சிரிச்சிட்டு எங்களோட குஷ்புவோட பொண்ணோட கல்யாணத்துல கலந்துகிட்டாரு. கோவால நாங்க எல்லாம் நேத்து சாயங்காலம் தான் வந்தோம். அவர் முந்தா நேத்து ராத்திரியே வந்தாரு. ரொம்ப சந்தோஷமா தான் இருந்தாரு,.
இன்னைக்கு காலையில வாக்கிங் போயிட்டு திரும்பி வரும்போது கொஞ்சம் நெஞ்சு வலின்னு சொல்லி இருக்காரு. ஹாஸ்பிடல்ல கொண்டு போகும்போது அவரோட உயிர் பிரிந்தது. சிரிச்சிக்கிட்டே இருந்தவரு சிரிச்சுக்கிட்டேதான் போயிருக்காரு".

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள்.
“அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.
மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி:
"பாக்யராஜ் சார் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மொழிகளைக் கடந்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டவை அவரது படைப்புகள்.
அவரது அசாத்தியமான கதைசொல்லல் திறனில் உருவான 'சுந்தரகாண்டா', 'அப்பாயிகாரு' போன்ற திரைப்படங்களில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இந்திய சினிமா இன்று தன் சிறந்த இயக்குநர்களில் ஒருவரை இழந்துவிட்டது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

தமிழ்நாடு இடைக்கால ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்:
"தமிழ்த்திரையுலகின் மூத்த இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு சினிமா உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரது தனித்துவமான கதைசொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ்த்திரையுலகிற்கான அவரது அளப்பரிய பங்களிப்பு ஆகியவை அவரை மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தில் சிம்மாசனமிட்டு அமரச் செய்துள்ளன.
அவர் விட்டுச்சென்ற கலைப்பணிகள், தலைமுறை கடந்தும் திரைப்பட இயக்குநர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் என்றும் ஊக்கமளிப்பதாக விளங்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

ஊர்வசி இரங்கல்
இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் .
'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி, "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை தர வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலக வரலாற்றில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜிற்கு தனி இடம் உண்டு. இவரது திரைக்கதைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் .

நடிகர் சிரஞ்சீவி இரங்கல்
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்குப் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளேன். முந்தாநாள்தான் கோவாவில் நடந்த குஷ்பூவின் மகள் திருமணத்தில் நாங்கள் ஒன்றாக இருந்தோம்; சிரித்துப் பேசினோம், ஜோக்குகளைப் பகிர்ந்து கொண்டோம், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். பாக்யராஜ் அவ்வளவு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
ஆனால், இன்று காலை அவர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு விழிப்பது என்பது முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், அசாத்தியமான திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒரு நல்ல நடிகர் என இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
பூர்ணிமா , சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைத் தாங்கும் சக்தியை அந்த இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும்.
இளப்பாறுங்கள் என் அன்பு நண்பரே.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)