மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

Aug 19, 2026 - 15:31
0
மேகமலை: `துணை ராணுவப் படையை  அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறும் பட்சத்தில் வனப்பகுதிகளுக்குத் துணை ராணுவப் படையை பாதுகாப்புக்கு அனுப்ப நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், இது குறித்த நிலை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மாஞ்சோலை மற்றும் மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக் கோரி ஜான் கென்னடி தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

விசாரணையில் வைக்கப்பட்ட வாதங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்:

தமிழக அரசு தரப்பு வாதம்: சமூக நீதி அமைச்சகத்தின் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, "மேகமலை சரணாலயத்தில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பலர் தலைமுறை தலைமுறையாகவும், நூறாண்டுகளுக்கு மேலாகவும் வசிப்பவர்கள் என்பதால் அவர்களுக்குச் சில தளர்வுகள் தேவைப்படுகின்றன. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். மேலும், விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 மாத காலம் அவகாசம் வேண்டும்" எனக் கோரினார்.

நீதிபதிகள் கடும் கண்டனம்:

``வனப்பகுதியில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது; அவற்றை முழுமையாக இடித்துப் தரைமட்டமாக்க வேண்டும். எந்தவொரு ஆக்கிரமிப்பையும் அனுமதிக்க முடியாது.இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ள நிலங்களை முழுமையாகக் கையகப்படுத்தித் தோட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில், அங்குப் பணிபுரிய வேலையாட்களைக் குடியமர்த்துவதில் இருந்தே ஆக்கிரமிப்பு தொடங்குகிறது. இதில் எந்தச் சலுகையும் காட்டக் கூடாது. ரிசர்வ் வனப்பகுதிகளில் எந்தக் காரணம் கொண்டும் எவருக்கும் நிலத்துக்கான பட்டா வழங்கக் கூடாது" என அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தனர்

உச்ச நீதிமன்றம்

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பரமேஸ்வர் ஆஜராகி, "ஓய்வுபெற்ற அதிகாரிகள் பலரும் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் திரும்ப வந்துள்ளன. ஆக்கிரமிப்புகள் இன்னும் தொடர்கின்றன" எனச் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், ``ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும். மேலும், நிலைமையைச் சமாளிக்க முடியாவிட்டால் பாதுகாப்புக்குத் துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டியிருக்கும்" என்றும் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நிலை அறிக்கையை 2 வார காலத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User