மேகதாது: `அண்டை மாநிலங்களையே எப்போதும் சார்ந்திருக்கிறோம்... தன்னிறைவு எப்போது?'- பிரேமலதா
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.

அப்போது, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ``சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் ஒன்றாக நின்று போராடுவோம் என்பதால், இத்தீர்மானத்தை யாரும் மறுக்கப் போவதில்லை.
நாடு சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியார் பிரச்னை, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை எனப் பல்வேறு விவகாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றனவே தவிர, இதுவரை எதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டதாக வரலாறு இல்லை. மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்தச் சட்டமன்றம் மக்களின் உணர்வுகளைப் பதிய வைக்க வேண்டிய இடம். நமது உரிமைகளுக்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இலங்கை என அண்டை மாநிலங்களையும், நாடுகளையும் எப்போதும் சார்ந்திருக்காமல், தமிழ்நாடு எப்போது நீர் ஆதாரங்களில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறப்போகிறது?

காவிரி உரிமைக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார், கலைஞர் கருணாநிதி பல போராட்டங்களை நடத்தினார், அண்ணன் மு.க.ஸ்டாலின் பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார். சட்டரீதியான போராட்டங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் என எதுவுமே இதுவரை முழுமையான தீர்வைத் தரவில்லை. தற்போது கர்நாடகாவில் பதவியேற்றுள்ள சிவக்குமார் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப மனிதர்களுக்கும், விவசாயிகளுக்கும் குடிநீரே முதன்மையானது. தமிழ்நாட்டை எப்படி மின்மிகை மாநிலமாக மாற்றினோமோ, அதேபோல 'நீர்மிகை மாநிலமாக' மாற்ற முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்டுக்கொண்டே இருப்பதை விடுத்து, மழைக்காலம் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டின் நதிகளை இணைக்கவும், நீர்நிலைகளைத் தூர்வாரி தண்ணீரைச் சேமிக்கவும் திட்டமிட வேண்டும். வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தடுத்தாலே தமிழ்நாடு நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெறும்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான கேப்டன் விஜயகாந்த், தமிழ்நாட்டு பிரச்னைகளுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல, தற்போதைய முதலமைச்சரும் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இறுதியாக, மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தே.மு.தி.க உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கான இத்தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறோம்." என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)