மேகதாது அணை: ``இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

May 25, 2026 - 18:02
0
மேகதாது அணை: ``இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" - விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

மேகதாது அணை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13 அன்று தள்ளுபடி செய்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியும், இந்த வழக்கை மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், 'முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யப் போதிய முகாந்திரம் இல்லை' எனக் கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேகதாது

இந்த நிலையில், தவெ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-வின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதாலும் அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது.

எனவே, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அமையவேண்டும். தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி மட்டுமே செய்துள்ளது. இதன் மூலம் உச்ச நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் அணை கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் அளிக்கவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ( DPR) அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

அன்றைய தலைமை நீதிபதி கவாய் வழங்கிய அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: “கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்படவுள்ள விரிவான திட்ட அறிக்கையானது, காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே காவிரி நதிநீர் ஆணையத்தால் பரிசீலிக்கப்படும்; ஏனெனில், விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் முன் ஒப்புதல் ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.“ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையிலேயே அணை கட்ட ஒப்புதல் கிடைத்ததாக அர்த்தம் கிடையாது.

எனவே, கர்நாடக அரசால் பூமி பூஜை நடத்த இயலாது. இது கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமாரின் ஒரு அரசியல் நாடகமே தவிர வேறொன்றும் இல்லை. திரு டி.கே.சிவக்குமாரின் பேச்சின் அடிப்படையில் நாம் பதற்றமடைய வேண்டாம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, கர்னாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்குக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைபாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User