`Last Bench' சர்ச்சை: ``தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்ள..." - நயினார் நாகேந்திரன்

Jul 06, 2026 - 19:01
0
`Last Bench' சர்ச்சை: ``தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்ள..." - நயினார் நாகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியுள்ளனர்.

அப்போது அமைச்சர் கீர்த்தனா, `முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்' எனக் குறிப்பிட்டு பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, விவாதப் பொருளாக மாறியது.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! “ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. கீர்த்தனா -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”.

செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

எனவே, முதல்வர் விஜய் அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User