`உதயநிதி விவகாரத்தில் கைதா?' - கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியைத் தவிர்த்த திமுக முன்னாள் மேயர்!

Aug 07, 2026 - 17:31
0
`உதயநிதி விவகாரத்தில் கைதா?' - கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியைத் தவிர்த்த திமுக முன்னாள் மேயர்!

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், தஞ்சாவூரில் கடந்த 3ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசையும், முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தில் உதயநிதி மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், கடந்த 4ம் தேதி உதயநிதியைக் கைதுசெய்து தஞ்சாவூர் அழைத்து வந்தனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய திமுக-வினர் முதல்வர் உருவ பொம்மை எரித்து எதிர்ப்பைக் காட்டினர்.

திமுக-வினர் போராட்டம்

அதே வேளையில் மகளிரை இழிவு செய்து பேசியதாக தவெக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக அண்ணா சிலை ரவுண்டானாவில் த.வெ.க-வினர் கட்சிக் கொடியை வைத்திருந்தனர். அங்கு வந்த திமுக-வினர் தவெக கொடியை சேதப்படுத்தினர். இதனால் திமுக, தவெக-வினருக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் காலணிகள் மற்றும் கற்களை வீசிக்கொண்டனர். இதில் தவெக-வைச் சேர்ந்த சிலர் காயம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக-வின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி புகார் அளித்தார். இதையடுத்து, திமுக மாநகரச் செயலாளர் முன்னாள் மேயர் சண்.இராமநாதன், கவுன்சிலர்கள் நீலகண்டன், அண்ணா.பிரகாஷ், கரந்தை உதயநிதி, மருத்துவக் கல்லுாரி பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் வயலுார் காரத்தி மற்றும் நிர்வாகிகள் ராஜா, மனோகர், சதீஷ், ராஜா சீனிவாசன் உள்ளிட்ட பத்து பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் நேற்று மாலை கிழக்கு போலீஸார் கவுன்சிலர் நீலகண்டன், மற்றொரு நிர்வாகி வயலுார் கார்த்தி ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியது. கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று திமுக-வினரால் அனுசரிக்கப்பட்டது. கீழவாசலில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஏராளமான திமுக-வினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

பின்னர், முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநகராட்சி பொறுப்பு மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்.ஜிஅண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக முன்னாள் மேயர் சண்.இராமநாதன்

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் மேயர் சண்.இராமநாதன், அண்ணா.பிரகாஷ் உள்ளிட்டோரை போலீஸார் கைதுசெய்வார்கள் என பேசப்பட்ட நிலையில், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து விவரம் அறிந்த திமுக தரப்பில் சிலரிடம் பேசினோம், ``மாநகரச் செயலாளர் என்பதால் சண்.இராமநாதன், எப்போதும் கருணாநிதி நினைவு நாள் பேரணிக்கு விமர்சையான ஏற்பாட்டை செய்வார்.

இந்தச் சூழலில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். இதையறிந்த சண்.இராமநாதன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்பதற்காக தலைமறைவாகினர். சண்.இராமநாதன் உள்ளிட்டோர் முன் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றனர். இன்று கருணநிதி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் போலீஸ் கைது செய்து விடும், அடுத்து விடுமுறை நாள்கள் வருவதால் பெயில் கிடைக்காது என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டனர்" என்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User