KD:The Devil - சஞ்சய் தத்தின் `சர்கே சுனார்' பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஆபாச வரிகளால் சர்ச்சை!

Mar 18, 2026 - 18:31
 0
KD:The Devil - சஞ்சய் தத்தின் `சர்கே சுனார்' பாடலுக்கு வலுக்கும் கண்டனங்கள்! ஆபாச வரிகளால் சர்ச்சை!

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் திரைப்படங்களின் ப்ரோமோஷனுக்காகவும், வணிக வெற்றிக்காகவும் ஐட்டம் சாங்ஸ் என்று சொல்லப்படும் ஸ்பெஷல் நடனப் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் இரட்டை அர்த்த வரிகளும், எல்லை மீறும் நடன அசைவுகளும் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கேடி: தி டெவில் படம்
கேடி: தி டெவில் படம்

அப்படியொரு சர்ச்சையில்தான் தற்போது சிக்கியுள்ளது கன்னட பான்-இந்தியா திரைப்படமான 'கேடி: தி டெவில்' (KD: The Devil) படத்தில் இடம்பெற்றுள்ள "சர்கே சுனார் தேரி சர்கே" (Sarke Chunar Teri Sarke) பாடல். சஞ்சய் தத்தாலும், நோரா ஃபதேஹியின் நடனத்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்பாடல், இன்று அதன் ஆபாச வரிகளுக்காகத் தடையை எதிர்கொண்டு இணையம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் மிகவும் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் கொண்டதாகவும், பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பாடலின் நடன அசைவுகளும், காட்சியமைப்பும் நாகரிகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (AICWA) மற்றும் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஆகியோர் திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC), மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் டெல்லி போலீஸ் சைபர் செல் ஆகியவற்றிடம் இப்பாடலை அனைத்து தளங்களில் இருந்தும் உடனடியாகத் தடை செய்ய வலியுறுத்திப் புகார்களை அளித்துள்ளனர். சிறுவர்கள் மத்தியில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இதற்கு முக்கியக் காரணம்.

இந்திப் பாடலை எழுதியதாகக் கூறப்படும் ரகீப் ஆலம், "நான் இந்த ஆபாச வரிகளை எழுத விரும்பவில்லை, மறுத்துவிட்டேன். ஆனால், கன்னட இயக்குநர் பிரேம் எழுதிய மூலப் பாடலின் வரிகளை அப்படியே இந்திக்கு மொழிபெயர்க்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினார்கள். பாடலின் முடிவில் இது ஒரு மது பாட்டிலைப் பற்றியது என்று சொன்னாலும், அதற்கு முன் வரும் வரிகள் மிகவும் மோசமானவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேடி: தி டெவில் படம்
கேடி: தி டெவில் படம்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) உறுப்பினரான பிரியங்க் கனூங்கோ, "இப்படிப்பட்ட பாடல்களை நாகரிகமான குடும்பத்துடன் அமர்ந்து யாரால் பார்க்க முடியும்?" என்று கேள்வி எழுப்பி, இது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், தற்போதைய ஆபாச வரிகளை மாற்றிவிட்டு, `சுத்தமான’ வரிகளுடன் இந்தப் பாடலின் புதிய பதிப்பை, மன்னிப்பு அறிக்கையுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேடி: தி டெவில் படம்
கேடி: தி டெவில் படம்

சினிமா என்பது மக்களை மகிழ்விக்கவும், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் பயன்பட வேண்டும். ஆனால், வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டும் ஆபாசத்தைத் திணிப்பது ஆரோக்கியமான கலாசாரத்திற்கு உகந்ததல்ல; குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் அது தவறான தாக்கத்தை ஏற்படுத்தும். இணையத்தில் எதை வெளியிட்டாலும் அது வைரலாகும் என்ற எண்ணம் மாறி, படைப்புச் சுதந்திரத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் எல்லாப் படைப்பாளிகளும் கையாள வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0