Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!

Jun 30, 2026 - 12:01
0
Japan: தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 32 அணிகள் மோதும் நாக் அவுட் சுற்றில், பிரேசில் அணிக்கு எதிராக கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடி தோல்வியடைந்தாலும், ஜப்பான் அணியின் ரசிகர்கள் தங்கள் நன்னடத்தையால் மீண்டும் ஒருமுறை உலகத்தின் மனங்களை வென்றுள்ளனர். போட்டியின் முடிவில் தங்களின் ஏமாற்றத்தையும் மீறி, மைதானத்தை சுத்தம் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்

ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான நாக் அவுட் ஆட்டத்தில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணியை ஜப்பான் தனது அபாரமான தற்காப்பு ஆட்டத்தால் நீண்ட நேரம் திணறடித்தது.

ஜப்பானின் இறுக்கமான பாதுகாப்பு அரணை உடைக்க முடியாமல் பிரேசில் வீரர்களும் சிரமப்பட்டனர். ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தில் (stoppage time) பிரேசிலின் மாற்று வீரர் கேப்ரியல் மார்டினெல்லி கோல் அடித்து அணியின் வெற்றியை 2-1 என்ற கணக்கில் உறுதி செய்தார். இந்த கடைசி நிமிட கோல், ஜப்பான் வீரர்களையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் முடிவு ஒருபுறம் இருக்க, ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த நிகழ்வுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தோல்வியால் ஏற்பட்ட கண்ணீரும், கவலையும் இருந்தாலும், ஜப்பானிய ரசிகர்கள் தங்கள் கடமையை மறக்கவில்லை.

இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர்கள் பின்பற்றி வரும் வழக்கப்படி, தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை முழுமையாக சுத்தம் செய்யத் தொடங்கினர். குப்பைகளை அகற்றி, இருக்கைகளை நேர்த்தியாக சரிசெய்து, அந்தப் பகுதி தாங்கள் வருவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல் சுத்தமாக மாற்றிவிட்டுச் சென்றனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் மரியாதை செலுத்தும் அவர்களின் இந்தப் பண்பு, மீண்டும் ஒருமுறை உலகை வியக்க வைத்துள்ளது.

ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்

இந்த முறை, ஜப்பானிய ரசிகர்களுடன் பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமர் (Streamer) 'ஐஷோஸ்பீடும்' (IShowSpeed) இணைந்து மைதானத்தை சுத்தம் செய்தார். ஜப்பானிய ரசிகர்களுடன் சேர்ந்து அவரும் குப்பைகளை அகற்றும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவியது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியது. "ஸ்பீட், ஆட்டத்தைப் பார்ப்பதில் இருந்து ரசிகர்களுடன் சுத்தம் செய்ய உதவியது வரை, அவருக்கு எங்களின் மரியாதை," என்று ஒரு ரசிகர் பாராட்டினார்.

அதேசமயம், "ஜப்பானியர்கள் மரியாதையின் காரணமாக இதைச் செய்கிறார்கள், ஆனால் அவர் கவன ஈர்ப்புக்காக (engagement) செய்கிறார். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது," என்று மற்றொருவர் விமர்சித்தார். எப்படி இருப்பினும், ஜப்பானியர்களின் இந்தச் செயல்பாடு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

களத்தில் ஜப்பான் அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர்களின் ரசிகர்கள் தங்கள் நாட்டின் மாண்பையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் நடந்துகொண்டு, அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளனர். இந்தச் செயல், மைதானத்திற்கும், போட்டிக்கும், சக மனிதர்களுக்கும் அவர்கள் அளிக்கும் மரியாதையின் அமைதியான வெளிப்பாடாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User