`உண்மைதான், ஆயிரம் முறை சொல்வேன்... உதயசூரியனில் போட்டியிட்டது துரதிஷ்டம் தான்' - துரை வைகோ

Jun 04, 2026 - 15:32
0
`உண்மைதான், ஆயிரம் முறை சொல்வேன்... உதயசூரியனில் போட்டியிட்டது துரதிஷ்டம் தான்' - துரை வைகோ

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் தொலைந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதனால் இது திருடப்பட்டது என்ற காரணத்தையும் காவல்துறை கண்டறிய வேண்டும். அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, சிறு, குறு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றனர். அடுத்து வரும் காலகட்டத்தில் விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய முயற்சி எடுப்பதாகச் சொல்லி இருக்கின்றனர். நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்னர், தேர்தல் வாக்குறுதிகளில் எதையெல்லாம் நடைமுறைப்படுத்த முடியும் என்பதைச் சொல்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

துரை வைகோ
துரை வைகோ

தி.மு.க கூட்டணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றோம். த.வெ.க-விற்கு ஆதரவு கொடுப்பீர்களா எனக் கேட்டதற்கு, இப்போதைக்கு அந்தச் சூழல் கிடையாது எனச் சொல்லி இருக்கின்றோம். எதிர்காலத்தில் ஆதரவு அளிப்பது குறித்து  முடிவெடுப்பவன் நான் அல்ல, பொதுக்குழுதான் எனச் சொல்லியிருந்தேன். நிர்வாகிகள் பேசுவதன் அடிப்படையில் முடிவு செய்வார்கள் எனச் சொல்லி இருந்தேன். உடனே கூட்டணி மாறப் போவதாகச் சொல்கின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. குற்றச் சம்பவங்களே  இல்லாத நிலையை உருவாக்க முடியாது. வெளிநாடுகளிலும் குற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்த ஆட்சிமீது குற்றச்சாட்டு வைக்கின்றார்கள். புதிய ஆட்சிக்கு ஆறு மாதம், ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். செங்கோட்டையனை தவிர மற்றவர்கள் அனுபவம் இல்லாமல் வந்தவர்கள்.

திருச்சியில் பேசும்போது தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டவசம் என்று சொன்னது உண்மைதான். ஒரு கட்சியின் கொடி, சின்னம்தான்  அடிப்படை அடையாளங்கள். ஒரு இயக்கம் தன்னுடைய சின்னத்தில் இல்லாமல் வேறு சின்னத்தில் நிற்பது தனித்துவத்தை இழக்கின்றது. சின்னம் மட்டும் பிரச்னை கிடையாது. இன்னொரு சின்னத்தில் நிற்கும்போது, அந்த கட்சி உறுப்பினராக மாற வேண்டும். இது ஜனநாயகமா என்பது கேள்வி. பத்து ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் சர்ச்சையாக மாறி விடக் கூடாது என்பதற்காக அக்கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தொண்டர்களின் மனக்குமுறலாக இதை துரதிஷ்டவசம் என சொன்னேன்.

இது தவறு என நான் சொல்லவே மாட்டேன், ஆயிரம் முறை இதை நான் சொல்வேன். நான் துரதிஷ்டம் என சொன்னதை, த.வெ.க-விற்கு ஆதரவு கொடுத்திருப்போம் என சொன்னதாக நினைத்து அதைக் கொச்சைப்படுத்தக் கூடாது. த.வெ.க. ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு மூப்பனார், வைகோ, விஜயகாந்த் கொண்டுவர முடியாத மாற்றத்தை, சாதி, மதத்தை கடந்து, பண அரசியலைக் கடந்து விஜய் கொண்டு வந்திருப்பதால், ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் சில கட்சி  தொண்டர்கள் அக்கட்சிக்கு போகிறார்கள், அதை தவறு என சொல்ல முடியாது” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User