"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

Jun 03, 2026 - 14:01
0
"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், "கவிக்கோ அவர்களின் நினைவாக நடத்தப்படும் இத்தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்காக நான் அழைக்கப்பட்டுள்ளேன். உண்மையைச் சொல்வதானால், எனக்குக் கவிதை படிக்கவும் ரசிக்கவும் தெரியுமே தவிர, எழுத வராது.

ஆனால், 'ஹைக்கூ கவிதை என்றால் என்ன?' என்று ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு விஷயம் புரிந்தது. முதலில் வரும் மூன்று அல்லது நான்கு வரிகள் மிகச் சாதாரணமாக ஒரு பொதுவான ஸ்டேட்மெண்ட் போல இருக்கும்.

ஆனால், அதன் இறுதி வரி நாம் அதுவரை படித்த எண்ண ஓட்டத்தையே மாற்றி, முற்றிலும் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வைக்கும்.

என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார்.

சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.

கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று செய்திகள் வந்தன.

மருத்துவமனைக்குள் யாருக்கும் அனுமதி இல்லாத அந்த இக்கட்டான சூழலில், முன்னின்று போராடி அவரை மீட்டெடுத்த முழுப் பெருமையும் லிங்குசாமியையே சாரும்.

ஏ.ஆர் முருகதாஸ்
ஏ.ஆர் முருகதாஸ்

அதுமட்டுமின்றி, குணமடைந்த வசந்தபாலன் ஆனந்த விகடனில் இது பற்றி எழுதியிருந்தார்.

அதில் அவர், "மருத்துவமனையில் அனைவரும் நீல நிற ஆடை அணிந்து நடமாடிக் கொண்டிருந்தபோது, என்னை நோக்கி ஒருவர் வந்தார்.

எனது கலங்கிய கண்களோடு பார்க்கும்போது, அந்த நீல ஆடை அணிந்த மனிதர் எனக்கு ஒரு தேவதையைப் போலத் தெரிந்தார்.

அருகில் வந்த பின்புதான் தெரிந்தது, அவர் எனது நண்பன் லிங்குசாமி என்று" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளுக்குள்ளேயே ஒரு அழகான கவிதை ஒளிந்திருக்கிறது. அதுதான் லிங்குசாமி!" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User