`தி.மு.கவுக்கு தாவுகிறாரா கே.டி ராஜேந்திர பாலாஜி?' - பரபரக்கும் விருதுநகர் அரசியல்

Aug 06, 2026 - 17:00
0
`தி.மு.கவுக்கு தாவுகிறாரா கே.டி ராஜேந்திர பாலாஜி?' - பரபரக்கும் விருதுநகர் அரசியல்

விருதுநகர் அ.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி திமுக-வுக்கு தாவ ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலால் விருதுநகர் பரபரத்து கிடக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்ததால் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் மிகுந்த விரக்தியில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய ஆதரவாளர்களே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக-வில் தற்போது எடப்பாடி அணி மற்றும் எஸ்.பி வேலுமணி அணி என இரண்டு அணியாக பிரிந்து இருப்பதால் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. இதனால் அதிமுக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது கே.டி ராஜேந்திர பாலாஜியும் இணையப் போகிறார் என்ற தகவல்தான் தற்போதைய ஹாட் டாபிக்கே.

அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்.

“மாவட்டச் செயலாளராக இருந்த ராஜேந்திர பாலாஜி முழு முயற்சியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.கவில் செல்வாக்காக இருந்தவர். ஆனால் அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் தனி அணியாக பிரிந்து அவருக்கு எதிராகவே செயல்பட ஆரம்பித்தனர். இதனால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை கூட அதிமுக கைப்பற்றவில்லை குறிப்பாக சிவகாசியில் இருந்து ராஜபாளையம் தொகுதிக்கு மாறிய ராஜேந்திர பாலாஜியும் தோல்வியடைந்தார்.

இதன்பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியடைந்தார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது. இந்த சூழலில் தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தி.மு.க-விற்கு தாவுவதாக அவரது ஆதரவாளர்களே கூறுகிறார்கள்” என்றார்

இது குறித்து கே டி ராஜேந்திர பாலாஜியின் நெருங்கியவர்கள் சிலரிடம் பேசினோம். "ராஜேந்திர பாலாஜி 2016 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஏழுக்கு ஏழு தொகுதியை கைப்பற்றி கொடுத்தவர். ஆனால் தற்போது அதிமுகவில் பல அணிகளாக பிரிந்து கிடப்பதால் அவரது எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

குறிப்பாக இப்படியே அதிமுகவில் இருந்தால் ராஜேந்திர பாலாஜிக்கும், ஆதரவாளர்களான எங்களுக்கும் அடுத்து அரசியலில் என்ன செய்வது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதிமுக-வில் ராஜேந்திர பாலாஜி கடுமையாக உழைத்தாலும் அவருக்கு சில வழக்குகளில் கட்சியின் தலைமையானது துணை நிற்கவில்லை. இந்த வருத்தம் அவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து வருகிறது. அதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராஜேந்திர பாலாஜி விரைவில் திமுகவிற்கு போகலாம். காரணம் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மிக மிக சீனியர், அவருக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கிடைப்பதை கடினம்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அவரது மகன்களும் அரசியலில் இருந்து தள்ளியே இருக்கிறார்கள். அதனால் திமுகவில் செல்வாக்கான ஒரு நபரை விருதுநகரில் களம் இறக்கி விருதுநகர் மாவட்ட திமுகவை பலப்படுத்த நினைக்கிறது கட்சியின் தலைமை. அதற்கு முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நல்ல சாய்ஸாக இருப்பார்" என ஒரே மூச்சாக சொல்லி முடித்தார்கள்.

இது குறித்து கே.டி.ஆர் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் நடக்கும் பிரச்னைகளில் அண்ணன் ராஜேந்திர பாலாஜி பெரிதாக தலையிடுவதில்லை. பல நாட்கள் வெளியூரில் தான் இருக்கிறார் கட்சி வேலைகளில் முழுமையாக இருந்த அவருக்கு அதிமுக தலைமை உரிய மரியாதை கொடுக்கவில்லை. அதனால் விரைவில் நல்ல முடிவை எடுக்கலாம்" என சொல்லி முடித்தார்கள்.

இது குறித்து கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்க அழைத்தோம். “நான் வெளியூரில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்“ என சொல்லி போனை கட் செய்தார்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User